

புதுடெல்லி
பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம் தீர்ப்பு வழங்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, ஜோஷி உட்பட 19 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கில் இருந்து அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும், 2019ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதிக்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
ஆனால், இந்த வழக்கை விசாரித்து வரும் லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி விசாரணையை முடிக்க மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்தார். கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப்.நாரிமன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வுல சிறப்பு நீதிமன்றத்துக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பான செயல் திட்டம் குறித்து பரிசீலித்து உத்தர பிரதேச அரசு முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.எப் நாரிமன் மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தர பிரதேச அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டி ஆஜரானார்.
உச்ச நீதிமன்ற அறிவுத்தல் படியே இந்த வழக்கில் உத்தர பிரதேச அரசு செயல்பட்டு வருகிறது. விசாரணை நீதிமன்ற நீதிபதியின் பதவிக்காலம், தீர்ப்பு வழங்கும் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.