Published : 13 Sep 2019 12:14 PM
Last Updated : 13 Sep 2019 12:14 PM

எஸ்சி, எஸ்டி சட்டம்; மத்திய அரசின் சீராய்வு மனு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி,

எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் புகார் அளித்தால் யாரையும் உடனடியாக கைது செய்யக்கூடாது என்று கடந்த ஆண்டு மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணையை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எஸ்சி,எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் குற்றம் சாட்டப்படும் நபர்களை முதல்கட்ட விசாரணை எதுவுமின்றி உடனடியாக கைது செய்வதற்குத் தடை விதித்தும், குற்றம் சாட்டப்பட்டோர் முன் ஜாமீன் பெறுவதற்குரிய அம்சங்களை அறிமுகப்படுத்தியும் உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

எஸ்சி, எஸ்டி சட்டத்தால் அப்பாவிகள் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் இந்தத் தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. எனினும், இந்தத் தீர்ப்பானது, எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கடுமையான பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த விவகாரத்தை முன்வைத்து, எஸ்சி, எஸ்டி அமைப்புகள் பழங்குடி அமைப்புகள் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. எனினும், தங்களது தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் விரிவான பதிலைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், மற்ற மனுதாரர்களுக்கும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் எஸ்சி, எஸ்டி சட்டத்தில் கடுமையான பிரிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கு வழிவகுக்கும் புதிய மசோதாவை, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. அதைக் கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆகஸ்ட் 9-ம் தேதி நிறைவேற்றியது.

ஆனால், மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி அருண் மிஸ்ரா கடந்த மே 1-ம் தேதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா, யு.யு. லலித் முன் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், எஸ்சி, எஸ்டி சட்டம் குறித்த எங்களின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அடுத்த வாரம் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் வழக்கு செல்லும்" எனத் தீர்ப்பளித்தனர்

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x