Published : 13 Sep 2019 11:56 AM
Last Updated : 13 Sep 2019 11:56 AM

கடந்த 40 ஆண்டுகளாக முதல்வர், அமைச்சர்களின் வருமான வரியைச் செலுத்தும் உ.பி. அரசு: அரசியல் கட்சிகள் அதிர்ச்சி

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் : கோப்புப்படம்

லக்னோ,

கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர்கள், அமைச்சர்களின் வருமான வரி அனைத்தையும் மாநில அரசே கருவூலத்தில் இருந்து செலுத்தி வருவது தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். உ.பி.யில் இருந்து வெளிவரும் நாளேடு ஒன்றில் வெளியாகியுள்ள செய்தியில் 'மாநில முதல்வரும், அவரின் அமைச்சர்களும் பரம ஏழைகள். அவர்களுக்கு வரும் ஊதியத்தில் இருந்து அவர்களால் வருமான வரியைச் செலுத்த முடியாத அளவுக்கு ஏழைகள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உ.பி.யில் முதல்வராக இருந்த வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில்தான் அமைச்சர்களும், முதல்வரும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டும், அந்த வருமான வரியை அரசே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 1981-ம் ஆண்டு உ.பி. அமைச்சர்கள் ஊதியம், படிகள், சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் உ.பி. மாநிலத்துக்கு இதுவரை 19 முதல்வர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாநில அரசுதான் வருமான வரியைச் செலுத்தி வருகிறது.

தற்போது முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மாயாவதி, கல்யாண் சிங், ராம் பிரகாஷ் குப்தா, ராஜ்நாத் சிங், ஸ்ரீபதி மிஸ்ரா, வீர் பகதூர் சிங், நரேன் தத் திவாரி ஆகியோர் இந்தச் சட்டத்தால் பலன் அடைந்தவர்கள். இவர்களின் அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களும் பலன் பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உ.பி.யில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து விளக்கம் கேட்க நிருபர்கள் முயன்றபோது அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டார்கள்.

சமாஜ்வாதிக் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், " இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவிக்கும் முன், முதலில் ஆலோசித்துவிட்டுப் பேசுகிறோம்" எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில் ,"வி.பி. சிங் முதல்வராக இருந்தபோது இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்தின் கீழ் அதிகமாகப் பயன் அடைந்தது, காங்கிரஸ் அல்லாத அரசுகளின் முதல்வர்கள்தான். 1980களில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏழ்மையான வகுப்பில் இருந்து வந்தார்கள். அவர்களின் ஊதியமும் குறைவாக இருந்தது. ஆனால், காங்கிரஸ் அல்லாத அரசுகள் ஆட்சிக்கு வந்தபின் முதல்வர்கள், அமைச்சர்கள் ஊதியத்தை உயர்த்தி சட்டம் இயற்றின" எனத் தெரிவித்தார்.

ஆனால், பாஜக கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பேசுகையில், " எனக்கு இதுபோன்ற சலுகை இருப்பது இதுவரை தெரியாது. என்னுடைய வருமானக் கணக்கைச் சரிபார்க்க எனக்கு நேரமில்லை. ஆனால், என்ன நடந்திருக்கிறது என்பது குறித்து இனிமேல் பார்ப்பேன்" எனத் தெரிவித்தார்.

உ.பி.யில் வி.பி.சிங் முதல்வராக இருந்தபோது இயற்றப்பட்ட இந்தச் சட்டம் குறித்து அப்போது அவர் சட்டப்பேரவையில் பேசுகையில், "பெரும்பாலான அமைச்சர்கள் ஏழ்மையான நிலையில் இருந்து வந்திருப்பதாலும், வருமானம் குறைவாக இருப்பதாலும் அனைத்து அமைச்சர்களின் வருமான வரியையும் மாநில அரசே செலுத்தும்" எனத் தெரிவித்தார்.

கடந்த 1981-ம் ஆண்டில் இருந்து உ.பி. அரசுதான் அமைச்சர்கள், முதல்வர்களுக்கு வருமான வரி செலுத்தி வருகிறது. கடந்த இரு நிதியாண்டாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரின் அமைச்சர்களுக்கு வருமான வரியாக ரூ.86 லட்சத்தை அரசு கரூவூலத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் பெரும்பாலான அமைச்சர்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தங்களுக்கு அசையா மற்றும் அசையும் சொத்துகள் மதிப்பு கோடிக்கணக்கில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், வருமான வரியை மட்டும் அரசு செலுத்துகிறது.

உ.பி. முதல்வர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அரசுதான் வருமான வரி செலுத்தி வருகிறது என்பதை மாநில நிதித்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சீவ் மிட்டல் உறுதி செய்துள்ளார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x