

லக்னோ,
எருமைகளைத் தொடர்ந்து வெள்ளாடுகளைத் திருடியதாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கான் மீது உ.பி. போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஆசம் கான். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
பாஜக எம்.பி. ரமாதேவி குறித்து மக்களவையில், ஆட்சேபகரமான முறையில் பாலியல் ரீதியான கருத்து தெரிவித்த புகாரில் ஆசம் கான் மன்னிப்பு கேட்டார். இதுமட்டுமின்றி உ.பி.யில் சமாஜ்வாதி ஆட்சிக் காலத்தில், நில அபகரிப்பு செய்ததாக தற்போது 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆசிப் மற்றும் ஜாகிர் ஆகியோருக்கு சொந்தமான எருமை மாட்டையும், பணத்தையும் திருடிவிட்டதாக ஆசம் கான் மீது புகார் எழுந்தது.
இந்தப் புகாரின்பேரில் அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது வெள்ளாடுகளைத் திருடியதாக ஆசம் கான் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராம்பூர் பகுதியைச் சேர்ந்த நஸிமா என்பவர் இந்தப் புகாரை அளித்துள்ளார். அதில் 2016-ம் ஆண்டு தனது வீ்ட்டிற்குள் புகுந்த ஆசம் கான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீட்டில் இருந்த பசு மாடு, எருமை மட்டுமின்றி 4 வெள்ளாடுகளையும் எடுத்துக்கொண்டு சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் அவர் திருடியதாகப் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வீடு புகுந்து ஆடு, மாடுகளைத் திருடியதாக ஆசம் கான் மீது உ.பி. போலீஸார் புதிய வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐஏஎன்எஸ்