உத்தரப் பிரதேச அரசுக்கு பெண்கள் பாதுகாப்பு மீது அக்கறை இல்லை: பிரியங்கா காந்தி சாடல்

உத்தரப் பிரதேச அரசுக்கு பெண்கள் பாதுகாப்பு மீது அக்கறை இல்லை: பிரியங்கா காந்தி சாடல்
Updated on
1 min read

புதுடெல்லி,

உத்தரப் பிரதேச அரசுக்கு பெண்களின் பாதுகாப்பு மீது துளியும் அக்கறை இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் தனது கருத்தினை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதில் அவர், "உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு அதன் செயல்பாடுகள் மூலம் பெண்களுக்கு அங்கு பாதுகாப்பே இல்லை என்பதை நிரூபித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இரண்டாவது முறையாக ஊடகங்களின் வாயிலாக தனக்கு நியாயம் கோருகிறார். உத்தரப் பிரதேச போலீஸார் ஏன் இவ்வளவு மெத்தனமாகச் செயல்படுகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர் பாஜகவுக்கு நெருக்கமானவர் என்பதால் இவ்வாறு செய்கின்றனரா?" என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் தனியார் சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் பாஜக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் பலாத்காரப் புகார் கூறியிருந்தார்.

அவரது குற்றச்சாட்டு வாட்ஸ் அப்பில் வைரலான அன்றைய தினமே அவர் மாயமானார். பின்னர் உச்ச நீதிமன்றத் தலையீட்டால் அவர் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனை சுட்டிக் காட்டியே பிரியங்கா காந்தி இந்த ட்வீட்டைப் பதிவு செய்திருக்கிறார்.

ஏற்கெனவே உன்னாவோ இளம்பெண் பாஜக பிரமுகர் குல்தீப் செங்கார் மீது அளித்த பலாத்காரப் புகாரின் பேரில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாநிலத்தின் மற்றொரு பாஜக முக்கிய பிரமுகரும் பாலியல் புகாரில் சிக்கியிருப்பது யோகி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

- ஏஎன்ஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in