

புதுடெல்லி,
ஐ.நா. ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி 7 நாட்கள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ராவேஷ் குமார் கூறுகையில், " நியூயார்க்கில் நடக்கும் ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் பிரதமர் மோடி வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஹாஸ்டன் நகரில் நடக்கும் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார். ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி ஐ.நா.வில் உரையாற்றுகிறார்.
பிரதமராக 2-வது முறை பொறுப்பேற்றபின் மோடி ஐ.நா. சபையில் உரையாற்றுவது இதுதான் முதல்முறை" எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஐ.நா.வில் உரையாற்றிய பின், அடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உரையாற்ற உள்ளார். இதுதவிர வரும் 24-ம் தேதி ஐ.நா. தலைமை அலுவலகத்தில் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசுகிறார்.
இதுதவிர பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில், பிரதமர் மோடிக்கு விருது வழங்கப்பட உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
பிடிஐ