Published : 13 Sep 2019 07:11 AM
Last Updated : 13 Sep 2019 07:11 AM

சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள ‘நாசா’ முயற்சி- இஸ்ரோ விஞ்ஞானிகளும் தீவிரம்

புதுடெல்லி

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (நாசா) முயற்சி செய்து வருகிறது.

நிலவுக்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) தயாரித்தது. அதன் முதல் பகுதியாக சந்திரயான்-1 விண்கலம் 2008-ல் நிலவுக்கு அனுப்பப்பட்டது. நிலவுக்கு 100 கிலோமீட்டர் உயரத்தில் இருந்தபடி சந்திரயான்-1 விண்கலம் நிலவை ஆய்வு செய்தது. நிலவில் நீர் இருந்ததற்கான தடயங்களையும் சந்திரயான்-1 கண்டுபிடித்தது

இந்நிலையில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இந்த விண்கலம் கிட்டத்தட்ட ரூ.978 கோடி ரூபாய் செலவில் உருவானது.

கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி விண்ணில் ஏவ தயாராக இருந்த சந்திரயான்-2 தொழில்நுட்பக் காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த சந்திரயான் -2 விண்கலம், ஆகஸ்ட் 14-ம் தேதி பூமியிலிருந்து விலகி, நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கியது.

படிப்படியாக தனது பயணத்தைக் கடந்த சந்திரயான்- 2 விண்கலம் கடந்த மாதம் 20-ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது. அதன் சுற்றுவட்டப்பாதையையும் உயரத்தையும் இஸ்ரோ தொடர்ந்து மாற்றி யமைத்து வந்தது.

பூமியில் இருந்து 3.8 லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்த நிலையில், சந்திரயான்-2 ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கி பயணத்தை தொடங்கியது.

இதைத் தொடர்ந்து நிலவின் தரைப்பகுதியில் விக்ரம் லேண்டரை மெதுவாக இறக்கும் பணியை கடந்த 7-ம் தேதி அதிகாலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். ஆனால் நிலவின் தரைப்பகுதிக்கு 2.1 கிலோமீட்டர் தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது அதன் சிக்னல் துண்டிக்கப்பட்டது.

இதனால் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப் பகுதியில் விழுந்திருக்கலாம் என கருதப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர், நிலவின் தரைப்பகுதி யில் ஒருபக்கம் சாய்ந்த நிலையில் விழுந்து இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் விக்ரம் லேண்டர் கீழே விழுந்ததில் நொறுங்கவில்லை என்பது உறுதியானது.

இந்நிலையில், விக்ரம் லேண்டரிலிருந்து சிக்னலைப் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இஸ்ரோவுக்கு கைகொடுக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் முன்வந்துள்ளது.

விக்ரம் லேண்டர் இறங்கியுள்ள நிலவின் தென் துருவப் பகுதிக்கு நிலவைச் சுற்றி வரும் நாசாவின் ஆர்பிட்டர் விண்கலம் செப்டம்பர் 17-ம் தேதி வரவுள்ளது. அப்போது அப்பகுதி யைப் படம்பிடிப்பதன் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறியவும், அதை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன என்று ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சக்திவாய்ந்த தனது ஆன் டெனாக்களை பயன்படுத்தி அசைவற்ற நிலையில் இருக்கும் விக்ரம் லேண்டருக்கு நாசா ஆய்வு நிறுவனம் ஹலோ என்று செய்தி அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர் னியா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, இந்த சமிக்ஞை (சிக்னல்) அனுப்பப்பட்டுள்ளது.

இஸ்ரோவுக்கு உதவும் விதத்தில் விக்ரம் லேண்டரைத் தொடர்புகொள்ள நாசா தனது ஆழ் விண்வெளி நெட்வொர்க் (டிஎஸ்என்) மூலம் இந்த சிக்னலை செலுத்தியுள்ளது. இதனால் விக்ரம் லேண்டரைத் தொடர்புகொள்ள முடியும் என்பதில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கூடுதல் நம்பிக்கை பிறந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x