Published : 12 Sep 2019 10:08 PM
Last Updated : 12 Sep 2019 10:08 PM

ஆதார்-சமூகவலைத்தள இணைப்பு-  பயனாளர் தனியுரிமை பற்றிய ஃபேஸ்புக்கின் அக்கறைகள் திசைத்திருப்பும் செயல்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 

புதுடெல்லி,

பேஸ்புக் பயனாளர்களின் தனியுரிமைப் பாதுகாப்பு பற்றி பேஸ்புக் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த அக்கறைகள் ‘பயனாளர்கள் பற்றிய தரவுகளை வர்த்தகம் செய்வது’ என்ற பிரதம வர்த்தக மாதிரியைத் திசைத்திருப்புவதற்காகவே என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சமூகவலைதளங்களோடு ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி பேஸ்புக் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை நிராகரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளத்துடன் ஆதார் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை, மும்பை உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் மட்டுமே விசாரிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு கடந்த மாதம் 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பேஸ்புக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது போன்ற விஷயங்கள் தனி மனிதரின் அந்தரங்கத்தில் குறுக்கிடும் செயல் என கூறி பேஸ்புக் நிறுவனம் வாதிட்டது.

அதேபோல் வாட்ஸ்அப் செயலி குறித்து உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளும் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என வாதிடப்பட்டது. ஆனால் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தின் சட்டவரம்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பேஸ்புக் நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்ட கருத்துக்கள், வாதங்கள், உண்மைகளை மறைத்து பேஸ்புக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அரசு குற்றஞ்சாட்டியது.

பயனாளர் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதான பேஸ்புக் நிறுவனத்தின் அக்கறைகள் போலியானவை, ஏனெனில் அதன் வர்த்தக மாதிரியே பயனாளார் தரவுகளை வியாபாரமாக்குவதுதான். இந்தத் தரவுகள் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இலக்குசார் விளம்பரங்களுக்காக விற்பதுதான் அவர்களது வர்த்தக மாதிரி.

இந்த விவகாரத்தில்தான் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா மோசடி விவகாரத்தில் அடிபட்டது, என்று தமிழக அரசு தன் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் சாராம்சம் என்னவெனில் போலி செய்திகளை உருவாக்குபவர் பற்றிய தகவல்களையும் கும்பல் வன்முறை, மற்றும் சைபர் கிரைம் உள்ளிட்ட குற்ற நடவடிக்கைகளைத் தடுக்கவும் தகவல்தொழில்நுட்பச் சட்டப்படி அரசுகளுக்கு, சைபர் கிரைம் துறைக்கு சமூகவலைத்தள நிறுவனங்கள் தகவல்களை பகிர வேண்டும். ஆகவே இந்த வழக்கு ஆதார் எண்ணை சமூகவலைத்தளங்களுடன் இணைக்கும் விவகாரத்துடன் தொடர்புடையதல்ல, பேஸ்புக் நிறுவனம் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவலை அளித்து திசைத்திருப்பும் முயற்சியில் இந்தியச் சட்டங்களுக்கு தனது ஒத்துழைப்பை வழங்காததை மறைக்கப் பார்க்கிறது என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆகவே இந்த வழக்கு வேறு, ஆதார் இணைப்பு வழக்கு வேறு எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x