Published : 12 Sep 2019 06:11 PM
Last Updated : 12 Sep 2019 06:11 PM

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் நெருப்போடு விளையாட வேண்டாம்: பாஜகவுக்கு மம்தா எச்சரிக்கை

கொல்கத்தா,

தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று பாஜகவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தவர்களைக் கண்டறியும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் கடந்த மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. வரைவுப் பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் மாநாட்டிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா குடியுரிமை இல்லாதவர்கள் வெளியேற்றப்படுவது உறுதி என திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் இம்முறை அமல்படுத்தப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதல்வர்கள் தெரிவித்தனர்.

நீண்டகாலம் வாழும் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் மத்திய அரசின் இம்முடிவுக்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்காக அவர் இன்று ஒரு போராட்டத்தை கொல்கத்தாவில் நடத்தினார்.

இன்று வடக்கு கொல்கத்தாவில் சிந்தி பகுதியிலிருந்து ஷியாம் பஜார் வரை 5 கி.மீ. தொலைவு வரை அவர் போராட்டத்தை நடந்தே முன்னெடுத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு மம்தா பானர்ஜி பேசியதாவது:

''தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவரையாவது தொட்டுப் பாருங்கள். தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் நெருப்போடு விளையாட வேண்டாம் என்று நான் பாஜக தலைவர்களுக்குச் சவால் விடுக்கிறேன்.

தேசிய குடியுரிமைப் பதிவேட்டை மேற்கு வங்கத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் வங்காளத்தில் என்.ஆர்.சி.யை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அசாமில் கொண்டுவரப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கு போலீஸ் நிர்வாகத்தைப் பயன்படுத்தியதால் மக்கள் அமைதியாக இருந்துவிட்டார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x