

புதுடெல்லி
மத்திய அரசின் தவறுகளால் தான் தற்போது நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது குறித்து திட்டங்களை இறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, குலாம் நபி ஆசாத், அகமது படேல், ஏ.கே.அந்தோணி, கே.சி.வேணுகோபால், மல்லிகாஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் பேசுகையில் ‘‘மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தபோதும் சர்வதேச பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. ஆனால் அப்போதைய மத்திய அரசு அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டது. பொருளாதார நெருக்கடியை சமாளித்தது.
ஆனால் தற்போதைய பாஜக அரசு பின்பற்றி வரும் மோசமான பொருளாதார கொள்கைகளால் நாடு பெரும் சிக்கலை சந்தித்து வருகிறது’’ எனக் கூறினார்.
மேலும், நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால் பெரிய அளவில் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாடுமுழுவதும் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும், தெருவில் இறங்கி மக்களுக்கு இதனை விளக்க வேண்டும், இதன் மூலம் மத்திய அரசின் செயலற்ற தன்மையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர்களை மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மன்மோகன் சிங்கின் இந்த கருத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெரிதும் வரவேற்று பேசியதாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.