Published : 12 Sep 2019 04:49 PM
Last Updated : 12 Sep 2019 04:49 PM

விதிமீறும் வாகன ஓட்டிகளிடம் பலமடங்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட மாட்டாது: உ.பி. அரசு உறுதி

உத்தரப் பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கட்டாரியா இன்று ஹம்ரிப்பூரில் ஏஎன்ஐக்கு பேட்டி அளிக்கிறார்.

ஹம்ரிப்பூர்,

கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச அரசும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், கடுமையான அபராதத் தொகை வசூலிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு பல மடங்கு அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.

அதிகரித்து வரும் வாகன விபத்துகளால் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என பலதரப்பட்ட மக்கள் விபத்துக்கு உள்ளாகி உயிரிழக்கின்றார்கள் என்றும் இதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இதன்படி டெல்லி, ஹரியாணா உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த பல மாநிலங்களிலும் வாகன ஓட்டிகளிடம் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அபராதத் தொகை விதிக்கப்பட்டது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லி அருகே ஒரு இளைஞர் தனது ஸ்கூட்டரை அபராதம் விதித்த போலீஸார் எதிரிலேயே எரித்து தீக்கிரையாக்கினார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தால் வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு உருவானது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என வெளிப்படையாக அறிவித்தன. இந்நிலையில் உத்தரப் பிரதேச அரசும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், கடுமையான அபராதத் தொகை வசூலிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கட்டாரியா இன்று ஹம்ரிப்பூரில் ஏஎன்ஐயிடம் பேசுகையில், ''போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் பழைய அபராதத் தொகை வசூலிக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், கடுமையான அபராதத் தொகை வசூலிக்கும் எண்ணம் இல்லை. இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதுதொடர்பான கோப்பு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x