

புதுடெல்லி,
‘ராமர் கோயில் தகராறு உள்ள இடத்தில் கட்டப்படும் உச்ச நீதிமன்றம் எங்களுடையது’ என்று உ.பி. அமைச்சர் ஒருவர் கூறியதாக எழுந்த செய்திகளை அடுத்து அயோத்தி வழக்குகளை கையாண்டு வரும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு உத்தரப் பிரதேச அமைச்சரின் அத்தகு கூற்றை தீவிரமாக கவனிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இத்தகைய கூற்றுகளை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது, கோர்ட் இதனை கண்டிப்பதோடு இத்தகைய கருத்துக்கள் எத்தரப்பிலிருந்து வந்தாலும் அது தீவிரமாக உற்று நோக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அயோத்தி வழக்கு விசாரணையின் 22ம் நாளில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவண் கூறும்போது, அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் தன்னுடைய காரியதரிசி கூட கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக்கப்படுவதோடு மிரட்டப்படுகிறார் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் செயல்படவில்லை வழக்கில் அவர்களை பிரதிநிதித்துவம் செய்கிறேன் அவ்வளவுதான் என்று தவண் விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக 88 வயது சென்னை நபர் ஒருவருக்கு உச்ச நீதிமன்றம் செப்.3ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அயோத்தி வழக்கில் முஸ்லிம் பக்கம் வாதாடுவதற்காக தவணை மிரட்டியதாக உச்ச நீதிமன்றம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்.ஷண்முகம் என்பவருக்கு எதிராக வழக்கறிஞர் தவண் அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல்கள் பல அச்சுறுத்தல்களில் ஒன்று என்று நீதிமன்றத்தில் கூறிய வழக்கறிஞர் தவண், “சஞ்சய் கலால் பஜ்ரங்கியின் பல வாட்ஸ் அப் செய்திகளையும் கோர்ட்டில் அவர் சுட்டினார். இச்செய்திகளின் ஸ்க்ரீன் ஷாட்களை தன் மனுவுடன் இணைத்திருந்தார் தவண்.
இந்நிலையில் உ.பி. அமைச்சரின் ‘உச்ச நீதிமன்றம் எங்களுடையது’ என்று கூறிய கருத்தையும் அரசியல் சாசன அமர்வு சீரியஸாக நோக்குவதாகத் தெரிவித்துள்ளது.