

புதுடெல்லி,
மக்களவைத் தேர்தலுக்கு முன் ஓலா, உபர் நிறுவனங்கள் வேலைவாய்ப்பைக் கொடுத்ததாக கூறிய பாஜக அரசு, இப்போது ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு அந்த நிறுவனங்களைக் குற்றம் சாட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் முதல் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. மாருதி, அசோக் லேலண்ட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் வேலையில்லா நாட்களை அறிவித்துள்ளன.
இந்நிலையில், சென்னையில் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் பேசுகையில், "ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு உபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன. மக்கள் சொந்தமாக கார் வாங்கி மாதத் தவணை கட்டுவதற்குப் பதிலாக, இதுபோன்ற வாடகைக் கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " மக்களவைத் தேர்தலுக்கு முன் ஓலா, உபர் நிறுவனங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றன, வேலைவாய்ப்பை அதிகரிக்கின்றன என்று அரசு கூறியது. இப்போது, ஆட்டோமொபைல் துறையின் சரிவுக்கு அந்த நிறுவனங்கள் மீது அரசு குற்றம் சாட்டுகிறது.
பொருளாதாரப் பிரச்சினையைப் பற்றி பாஜக அரசு ஏன் குழப்பிக்கொள்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியும் தனது கண்டன அறிக்கையில், "நிர்மலா சீதாராமனின் கருத்து, திறனற்றது, முதிர்ச்சியற்றது. பாஜக நிர்வாகத்தின் அனுபவமின்மையைக் காட்டுகிறது" என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ