முட்டாள்தனமான வாதம் வேண்டாம்; பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்க தீர்க்கமான திட்டம் தேவை: மத்திய அரசு மீது ராகுல் காந்தி சாடல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி : கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க தீர்க்கமான திட்டங்கள் அவசியம். ஆனால், முட்டாள்தனமான வாதங்கள், பிரச்சாரங்கள் போன்றவை தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடியுள்ளார்.

நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.

ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் 2-வது முறையாக மத்தியில் பதவி ஏற்றுள்ள பாஜக அரசு 100 நாட்களை எட்டியுள்ளதையடுத்து, அதன் சாதனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கிக் கூறினார்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு உபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன. மக்கள் சொந்தமாக கார் வாங்கி மாதத் தவணை கட்டுவதற்குப் பதிலாக, இதுபோன்ற வாடகைக் கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமனின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "பிரச்சாரங்கள், செய்திகளைப் புதிதாக உருவாக்குவது, முட்டாள்தனமான வாதங்கள் போன்றவை இந்தியாவுக்கு இப்போது அவசியம் இல்லை. இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீர்க்கமான திட்டம் தேவை. அதற்கு அனைவரும் பின்புலத்தில் இருப்போம்.

நமக்கு பிரச்சினை இருக்கிறது என்பதை முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் தொடக்கத்துக்கு நல்ல இடம்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

அந்த ட்வீட்டுடன் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் அளித்த நேர்காணல் குறித்த விஷயங்களையும் ராகுல் காந்தி இணைத்துள்ளார். அதாவது, ஜிஎஸ்டி வரியை சீர்திருத்துங்கள். கிராமப்புற நுகர்வை அதிகப்படுத்துங்கள். வேளாண்மையை ஊக்கப்படுத்துங்கள். முதலீட்டு உருவாக்கத்தில் உள்ள சிக்கலைத் தீருங்கள் போன்ற விஷயங்களை மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in