Published : 12 Sep 2019 02:37 PM
Last Updated : 12 Sep 2019 02:37 PM

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி; பிரிவினைவாதம் தீங்கு விளைவிக்கும்: இஸ்லாமிய அறிஞர்கள் தீர்மானம்

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று உறுதியாகக் கூறும் அதே வேளையில், எந்தப் பிரிவினைவாத இயக்கமும் நாட்டிற்கு மட்டுமல்ல, காஷ்மீர் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று இஸ்லாமிய அறிஞர்கள் இன்று கூறியுள்ளனர்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவை ரத்து செய்து மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு சில பகுதிகளில் இன்னும் பதட்டமான சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில் இஸ்லாமிய அறிஞர்களின் முன்னணி அமைப்புகளில் ஒன்றான ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு இன்று (வியாழக்கிழமை) ஒரு தீர்மானத்தை முன்மொழிந்துள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் கூறியுள்ளதாவது:

''காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும், அனைத்து காஷ்மீரிகளும் எங்கள் தோழர்கள். எந்தவொரு பிரிவினைவாத இயக்கமும் நாட்டிற்கு மட்டுமல்ல, காஷ்மீர் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும். இது காஷ்மீர் மக்களின் விருப்பத்தையோ, மற்றும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பொருட்படுத்தாது எனினும், இந்தியாவுடன் ஒன்றாக இணைந்து இருப்பதுதான் காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு நன்மை பயக்கும் என்பது எங்களின் உறுதியான நம்பிக்கை.

விரோத சக்திகளுடன் சேர்ந்துகொண்டு காஷ்மீரை அழிப்பதில், பாகிஸ்தான் முனைந்து நிற்கிறது. மேலும் காஷ்மீரை அழிக்க விரோத சக்திகளும் அண்டை நாடும் வளைந்துகொடுக்கின்றன.

காஷ்மீரின் ஒடுக்கப்பட்ட மற்றும் கடுமையான சூழ்நிலையில் உள்ள மக்கள் இருவேறு முனைகளில் நின்று எதிர்க்கும் சக்திகளுக்கு இடையில் சிக்கித் தவிக்கின்றனர். எதிரிகள் காஷ்மீரை ஒரு கேடயமாகப் பயன்படுத்தி அதனை ஒரு போர்க்களமாக மாற்றியுள்ளனர்.

பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் பேணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தொடக்கமாக அமைதியை நிலைநாட்டுவது ஒன்றுதான் இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் செய்ய வேண்டியது. குறிப்பாக அணு சக்தி மோதல் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளைக் கருத்தில் கொண்டு இதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

பிராந்தியத்தில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான அரசியலமைப்பு வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் காஷ்மீரில் மக்களின் வாழ்க்கையும் செல்வமும் பாதுகாப்பதோடு அவர்களுக்கான மனித உரிமைகளும் காக்கப்பட வேண்டும்''.

இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x