Published : 12 Sep 2019 01:00 PM
Last Updated : 12 Sep 2019 01:00 PM

கர்நாடகா எம்எல்ஏக்கள் 17 பேர் தகுதி நீக்கத்துக்கு எதிரான மனு: உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி,

கர்நாடக மாநிலத்தின் எம்எல்ஏக்கள் 17 பேர் முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகத் தொடரப்பட்ட மனு மீது எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது.

கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த ஜூலை 23-ம்தேதி ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக இருந்த குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் கொறடாக்கள் தங்கள் எம்எல்ஏக்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

ஆனால், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கினர். நம்பிக்கை வாக்கெடுப்பிலும் இந்த எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சபாநாயகர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தார். முதல்கட்டமாக, கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி ஆகியோரைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் கேஆர் ரமேஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த சூழலில் காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகளின் கொறாடா பிறப்பித்த உத்தரவை மீறியதையடுத்து, இரு கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

இதன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் 2023-ம் ஆண்டு வரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இது தவிர சபாநாயகர் ரமேஷ் குமார், காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்வர் ஹெச்டி குமாரசாமி ஆகியோர் சார்பிலும் 17 பேரின் தாக்கல் மனுவுக்கு பதில் மனுதாரர்களாக மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி ஆஜாராகி வாதாடினார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மூத்த வழக்கறிஞர் திவிவேதி வாதிடுகையில், "மனுதாரர்கள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியபடி சுதந்திரமாக வர்த்தகம், தொழில் செய்ய உரிமை இருப்பதுபோல் தங்கள் பதவியையும் ராஜினாமா செய்யவும் உரிமை உள்ளது. இந்த ராஜினமாவை சட்டவிரோதம் என்று சபாநாயகர் அறிவித்தது சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு விரோதமானது. சபாநாயகரின் உத்தரவு அடிப்படை உரிமையை மீறுவது போன்றதாகும்.

சபாநாயகரின் நடவடிக்கை தன்னிச்சையானது, காரணம் இன்றி செய்யப்பட்டது. ஏற்கெனவே ஜூலை 6-ம் தேதி நேரடியாகச் சென்று ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டோம், இருப்பினும் மீண்டும் ஜூலை 11-ம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று மீண்டும் சென்று சந்தித்தோம். ஆனால் எங்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டுமென்றே சபாநாயகர் தாமதம் செய்தார்" என்று வாதிட்டார்.

இந்த வழக்கு முதலில் செப்டம்பர் 16-ம் தேதி விசாரணைக்கு இடப்பட்டது. பின்னர் மாற்றப்பட்டு 12-ம்தேதி விசாரணை என மாற்றப்பட்டது. ஆதலால், இந்த வழக்கில் நீதிபதி உத்தரவு ஏதேனும் பிறப்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் திவிவேதி கோரினார்.

அதற்கு நீதிபதி என்.வி.ரமணா, "பொறுமையாக இருங்கள். என்ன அவசரம் தேவையிருக்கிறது" எனக் கூறி எந்தவிதமான உத்தரவையும் பிறப்பிக்க மறுத்துவிட்டார்.

.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x