செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 12:35 pm

Updated : : 12 Sep 2019 12:49 pm

 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு; ஜாமீன் கோரும் சிதம்பரம் மனு:  பதிலளிக்க சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு 

chidambaram-s-bail-plea-delhi-high-court
கோப்புப் படம்

புதுடெல்லிஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 15 நாட்களாக சிபிஐ காவலில் ப.சிதம்பரம் இருந்து வந்தார். செப்டம்பர் 5-ம் தேதி அவர் மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என சிதம்பரம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் ப.சிதம்பரத்தை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பொருளாதார குற்றவாளிகள் வைக்கப்பட்டிருக்கும் 7-ம் எண் கொண்ட சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்ககோரி சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும் கோரி அவரது சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிஐ 7 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையை 23-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

முன்னதாக சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்ககோரி சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் கோரிக்கை குறித்து குறிப்பிட்ட டெல்லி உயர் நீதிமன்றம், ஒரு வாரம் காலத்துக்கு பிறகு இந்த கோரிக்கையை எழுப்புவது ஏன் என கேள்வி எழுப்பியது.

அப்போது சிதம்பரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தொடர்ந்து விடுமுறைகள் வந்ததால் உயர் நீதிமன்றத்தை தொடர்பு கொள்ள காலதாமதம் ஆனதாக தெரிவித்தார். இதையடுத்து சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவர் அறிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்குசிபிஐடெல்லி உயர் நீதிமன்றம்சிதம்பரம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author