Published : 12 Sep 2019 12:25 PM
Last Updated : 12 Sep 2019 12:25 PM

மரக்கன்றுகளைத் தின்ற ஆடுகள்: கைது செய்த காவல்துறை

ஹுஸுராபாத்

ஆந்திராவில் அறக்கட்டளை ஒன்றால் நடப்பட்ட மரக்கன்றுகளை 2 ஆடுகள் தொடர்ந்து தின்றதால், அவற்றைக் காவல்துறை கைது செய்தது.

இதுகுறித்து ஹுஸுராபாத் ஆய்வாளர் மாதவி 'தி இந்து'விடம் பேசும்போது, ''தொண்டு நிறுவனமான 'சேவ் த ட்ரீஸ்' என்ற அமைப்பு, நகரம் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த அனில், விக்ராந்த் என்னும் தன்னார்வலர்கள் இருவர் எங்களிடம் புகார் அளித்தனர்.

அதில், அவர்கள் நகர் முழுவதும் 900 மரக்கன்றுகளை நட்டு வளர்த்ததாகவும் அவற்றில் சுமார் 250 மரக்கன்றுகளை இரண்டு ஆடுகள் தின்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தது. புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்றோம்.

அப்போதும் ஆடுகள் இரண்டும் சேர்ந்து மரக்கன்றுகளைத் தின்றுகொண்டிருந்தன. அவற்றைக் கைது செய்து காவல் நிலையத்தில் நிறுத்தினோம்.

ஆடுகளின் உரிமையாளர் டோர்னகொண்டா ராஜையா காவல் நிலையம் வந்து ஆடுகளைக் கேட்டார். ஆடுகளுக்கு ரூ.1000 அபராதம் விதித்தோம். நகரத்துக்கு வெளியேதான் ஆடுகளை மேய்க்க வேண்டும் அல்லது வீட்டிலேயே கட்டி வைத்துக் கொள்ளலாம் என்று நிபந்தனையும் விதிக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

ஆடுகளைக் காவல்துறை கைது செய்து, காவல் நிலையத்துக்கும் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x