

ஹைதராபாத்
பாலாபூரில் விநாயகர் சதுர்த்திக்கு படைக்கப்பட்ட 21 கிலோ லட்டு 17.6 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாட்டபட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாடு நடத்துவதற்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகின்றன.
ஹைதராபாத்தில் வழிபாடு செய்யப்பட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் உசேன் சாகர் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
(படவிளக்கம்: ஹைதரபாத்தில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட விநாயகர் சிலை)
ஹைதராபாத் அருகே பாலாபூர் பகுதியில் ஆண்டுதோறும் பிரமாண்ட விநாயகர் சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு 21 கிலோ எடையுள்ள லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்டு ஆண்டு தோறும் ஏலம் விடுவது வழக்கம்.
அதன்படி இநு்த ஆண்டும் 21 கிலோ எடையுள்ள லட்டு தயாரிக்கப்பட்டு படைக்கப்பட்டு இருந்தது. இந்த லட்டு பிரசாதம் ஏலம் விடப்பட்டது. தெலங்கானா அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி உள்ளிட்டோர் இந்த ஏல நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பாலாபூர் மட்டுமின்றி தெலங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்டோர் இந்த ஏலத்தில் கலந்து கொண்டனர். பலச்சுற்று ஏலம் நடந்தது. கடைசியில் உள்ளூர் நபரான ராம் ரெட்டி 17.6 லட்சம் ரூபாய்க்கு லட்டுவை ஏலம் எடுத்தார்.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கூடுதலாக ஒரு லட்சம் ரூபாய்க்கு லட்டு ஏலம் போனது. ராம் ரெட்டி தொழிலதிபராக இருந்து வருகிறார்.