

லக்னோ
உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி தவிர பிரஜ், போஜ்புரி மொழிகளில் பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இந்தியை தவிர பிரஜ், போஜ்புரி, அவந்தி உள்ளிட்ட பல உள்ளூர் மொழிகளும் புழக்கத்தில் உள்ளன. இருப்பினும் தொடர்பு மொழியாக இந்தியே இருந்து வருகிறது.
இதனால் இந்தி அல்லாத பிறமொழிகளை தாய் மொழிகளாக கொண்டவர்களுக்கும் இந்தி மொழிகளிலேயே பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தன. இதனால் தொடக்கப் பள்ளிகளிலும் பயிலும் தாய் மொழியை மட்டுமே தெரிந்த குழந்தைகளுக்கு பெரும் சிக்கலாக இருந்தது.
இதையடுத்து உத்தர பிரதேச அரசு இந்தி தவிர பிற மொழிகளிலும் பாடப்புத்தங்களை தயார் செய்யும் பணியை தொடங்கியது. அதன்படி 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு அவர்களது தாய் மொழிகளான பிரஜ், போஜ்புரி, அவந்தி மொழிகளில் தயார் செய்யப்பட்டுள்ளன. 15 விதமான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை மதுரா, கோரக்பூர், லலித்பூர், பாரபங்கி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தி அல்லாத பிறமொழியை தாய் மொழியாக கொண்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக தொடக்க கல்வித்துறை அமைச்சர் சதிஷ் திவேதி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் அஜய் சிங் கூறுகையில் ‘‘இதன் மூலம் மாணவ, மாணவியர் தங்களுக்கு தெரிந்த தாய் மொழியிலேயே கல்வி கற்க முடியும். இந்தி மட்டுமே தெரிந்த ஆசிரியர்களால் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாடம் நடத்துவது கடினமாக உள்ளது.
எனவே அந்தந்த மொழி தெரிந்த ஆசிரியர்களை பணியில் சேர்ப்பதுடன், அவர்களது தாய் மொழியிலேயே புத்தகம் வழங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனக் கூறினார்.
ஐஏஎன்ஸ்