

ஜெய்ப்பூர்,
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் பயணித்த 6 வயது சிறுவன் பலியானார். வாகனத்தை ஓட்டிய முதியவர் படுகாயமடைந்தார்
இந்த விபத்து ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில் உள்ள திஜாராவில் நடந்துள்ளது.
ஆல்வார் மாவட்டம், திஜாராவில் உள்ள ககன்கார் கிராமத்தில் இருக்கும் துறவி பாபா கமல்நாத்தைச் சந்திக்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நேற்று சென்றார். அந்த நிகழ்ச்சி முடிந்து மோகன் பாகவத் ஆல்வார் நகருக்குத் திரும்பினார்.
மோகன் பாகவத்துக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருப்பதால், அவரின் வாகனத்தின் முன்னும், பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் 10-க்கும் மேற்பட்டவை அணிவகுத்துச் சென்றன.
அப்போது சாலை ஓரமாக இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் மீது பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவரும், அதில் பின் இருக்கையில் இருந்த 6 வயது சிறுவனும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானார். அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து மாண்டவார் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாண்டவர் போஸீஸ் நிலைய துணை ஆய்வாளர் ராம்ஸ்வரூப் பெய்ரவா கூறுகையில், "மோகன் பாகவத் சென்ற காருக்குப் பின்னால் அணிவகுத்த பாதுகாப்பு வாகனங்களில் ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அந்த விபத்தில் 6 வயது சிறுவன் பலியானார், முதியவர் படுகாயமடைந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இன்னும் விபத்துக்குரிய காரைப் பறிமுதல் செய்யவில்லை" எனத் தெரிவித்தார்
பிடிஐ