செய்திப்பிரிவு

Published : 12 Sep 2019 10:45 am

Updated : : 12 Sep 2019 10:45 am

 

ஆளுநர் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்திய ரோசய்யா

rosaiah-calls-on-telangana-guv-dr-tamilisai

ஹைதராபாத்

தெலங்கானா ஆளுநர் தமிழிசையை, தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 8-ம் தேதி பொறுப்பேற்றார். இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பும் தமிழிசைக்குக் கிடைத்தது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தெலங்கானா ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுநர் தமிழிசைக்கு பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்தவரும் தமிழகத்தின் 24-வது ஆளுநராகப் பணியாற்றியவருமான ரோசய்யா, தமிழிசையை நேற்று மாலை நேரில் சந்தித்துப் பேசினார். ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஆளுநராக இருந்த நாட்களை தமிழிசையிடம் நினைவுகூர்ந்தார் ரோசய்யா. தமிழிசை சிறப்பாகப் பணிபுரியவும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தெலங்கானா மக்களுடன் சொந்த மொழியில்தான் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழிசை, தெலுங்கு மொழியைக் கற்று வருகிறார். தெலங்கானாவைத் தலைசிறந்த மாநிலங்கலில் ஒன்றாக மாற்ற, அனைவரும் அரசியல், சமூக வித்தியாசங்களை விடுத்து ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்றும் தமிழிசை கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RosaiahTamilisaiTelanganaஆளுநர்தமிழிசைரோசய்யா
Popular Articles

You May Like

More From This Category

More From this Author