Published : 11 Sep 2019 09:30 PM
Last Updated : 11 Sep 2019 09:30 PM

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையானது, மேற்கு வங்கத்தில் அமல் இல்லை: மம்தா பானர்ஜி திட்டவட்டம்

புதிய மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், 2019 மிகவும் கடுமையான அபராதங்களை விதித்து ஏழை மக்களை வதைப்பதாக உள்ளது எனவே இந்தச் சட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்தப் பட மாட்டாது என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதாக தினசரி செய்திகள் எழுந்து வருகின்றன. இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு டெல்லியில் ஹெல்மெட் போடாதது மற்றும் கையில் ஆவணங்கள் இல்லாமல் வந்தது ஆகியவற்றுக்கு ரூ.25,000 தொகை அபராதம் விதிக்கப்பட்டு அதிச்சியேற்படுத்தியது.

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆவணங்களைக் கொண்டு வருகிறேன் அரை மணி நேரம் அவகாசம் கொடுங்கள் என்று கெஞ்சியும் ரூ.32,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் கூறும்போது, “சமீபமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல் படுத்தப் பட மாட்டாது. ஏனெனில் அபராதத் தொகைகள் கடுமையாக இருக்கின்றன. நாங்கள் ஏற்கெனவே உருவாக்கிய ‘பாதுகாப்பான பயணம் பாதுகாப்பான வாழ்க்கை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தையே இன்னும் தீவிரப்படுத்துவோம்.

இது நிறைவேற்றப்பட்ட அன்றே எங்கள் கட்சி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவர்கள் காதில் வாங்கவில்லை. மக்களை வதைக்கும் இத்தகைய சட்டங்களை ஒருபடித்தாக எடுக்கக் கூடாது. இப்போது விதிமீறல் என்றால் ரூ.500 அபராதத்துக்குப் பதிலாக ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. ஏழை மக்களும் சிக்குகின்றனர், இத்தனை பணத்துக்கு அவர்கள் எங்கு செல்வார்கள்?

ஆகவே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையைச் செலுத்துவதாகும்.” என்றார் மம்தா பானர்ஜி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x