Published : 11 Sep 2019 04:57 PM
Last Updated : 11 Sep 2019 04:57 PM

புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கும் அபராதம் தற்கொலையை அதிகரிக்கும்: மகாராஷ்டிரா விவசாய சங்கத் தலைவர் எச்சரிக்கை 

பிரதிநிதித்துவப்படம்

நாக்பூர்,

புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி வாகன ஓட்டிகளிடம் கடுமையான அபராதம் விதிப்பது மக்கள் விரோதமானது. இது மக்களிடையே தற்கொலையை அதிகரிக்கும் என்று மகாராஷ்டிர விவசாயிகள் சங்கத் தலைவர் எச்சரித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் வசந்த்ராவ் நாயக் ஷேத்தி ஸ்வலம்பான் மிஷன்(விஎன்எஸ்எஸ்எம்) என்ற அமைப்பின் தலைவர் கிஷோர் திவாரி இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இவருக்கு மகாராஷ்டிர அரசு கேபினட் அந்தஸ்தில் பதவியையும் அதிகாரத்தையும் அளித்துள்ளது.

கிஷோர் திவாரி : படம் உதவி ட்விட்டர்

புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்படும் அபராதம் குறித்து கிஷோர் திவாரி கூறியதாவது:

''புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி விதிக்கப்படும் கடுமையான அபாரத்தை அனைத்து மக்களும் எதிர்க்கிறார்கள். குறிப்பாக நடுத்தர மக்கள் அதிகமாக எதிர்க்கிறார்கள். இந்த அபராத நடவடிக்கை மக்கள் விரோத நடவடிக்கை.

இதுதொடர்பாக மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்துப் பேசினேன், உடனடியாக அபாரதத் தொகையைக் குறைக்கவும் வலியுறுத்தினேன். இதுபோன்ற கடுமையான அபராதம், சமானிய மக்களை தற்கொலைக்குத் தூண்டிவிட்டு, தற்கொலையை அதிகரிக்கும்.

குஜராத் பிரதமர் மோடியின் சொந்த மாநிலம். அங்கு பாஜக ஆட்சிதான் நடக்கிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், அந்த மாநில அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் விதிக்காமல் குறைத்துள்ளது. இதன் மூலம் பாஜக ஆளும் மாநிலங்கள்கூட இந்த அபராதத்துக்கு எதிராக இருக்கிறது.

நிதின் கட்கரிகூட புதிய மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தியதாகக் கூறுகிறார். அவருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் விதித்தால்கூட அது பெரிய தொகை இல்லை. ஆனால்,சாதாரண ஒரு டாக்ஸி ஓட்டுநர், ஆட்டோ ஓட்டுநருக்கு இதுபோன்ற அபராதம் விதித்தால் அவரால் தாங்க முடியாது. ஒரு மாத ஊதியம் பறிபோய்விடும். அதன்பின் அவரின் குடும்பம் பட்டினி கிடந்து, தற்கொலைக்குத்தான் செல்லும்.

எந்தவிதமான ஆலோசனையும் சம்பந்தப்பட்டவர்களும் எடுக்காமல் இந்த அபாரதத் தொகை முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொருளாதாரச் சூழல் சிக்கலாகி இருக்கும் போது இது மேலும் பெரிதாக்கும்.

ஆட்டொமொபைல் துறை கடும் சரிவிலும், மந்தநிலையிலும் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய டிரக்குகளை வாங்கமாட்டோம் என்று வாகன கூட்டமைப்பினர் அறிவித்துள்ளார்கள். இதுபோன்ற அபராதம் விதித்தால் நடுத்தர மக்கள்கூட புதிய வாகனம் வாங்குவதைத் தவிர்த்துவிடுவார்கள்.

அதிகரிக்கும் வரி, பணவீக்கம், வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு இப்போது போக்குவரத்து அபராதம். மக்கள் பலர் இப்போதே சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கிவிட்டார்கள்''.

இவ்வாறு திவாரி தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x