Published : 11 Sep 2019 04:23 PM
Last Updated : 11 Sep 2019 04:23 PM

‘‘விபத்துகளைக் குறைக்கவே அபராதம்; அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல’’ - நிதின் கட்கரி விளக்கம்

புதுடெல்லி,

விபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. பல்வேறு மாநில அரசுகளும் இதனைப் படிப்படியாக அமல்படுத்தி வருகின்றன. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒடிசாவில் சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.

டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரித்தார்.

லாரி டிரைவர் ஒருவருக்கு ரூ. 1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், ''ஆண்டுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். விபத்துகளில், இளைஞர்கள் தான் அதிக அளவில் உயிரிழக்கின்றனர். விபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தைக் குறைப்பது குறித்து, மாநில அரசுகள் முடிவு செய்யலாம். அபராதம் மூலம் கிடைக்கும், வருமானம் மாநில அரசுகளுக்குத்தான் செல்லுமே தவிர, மத்திய அரசுக்கு அல்ல. புதிய வாகனச் சட்டத்தைப் பார்த்து பயப்படுவதை விட்டுவிட்டு மக்கள் விதிமீறல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x