Published : 11 Sep 2019 04:13 PM
Last Updated : 11 Sep 2019 04:13 PM

இனியும் காங்கிரஸில் இருப்பதில் அர்த்தமில்லை: விலகிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பேட்டி

மும்பை

''இனியும் காங்கிரஸில் இருப்பதில் அர்த்தமில்லை'' என்பதால் கட்சியிலிருந்து விலகியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் சத்யஜித் தேஷ்முக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் நடிகை ஊர்மிளா காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இரண்டாவது நாளே கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சத்யஜித் தேஷ்முக்கும் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர காங்கிரஸைப் பொறுத்தவரை அங்கு தொடர்ந்து குழப்பம் நிலவுவதாகக் கூறப்படுகிறது. அடுத்தடுத்த ராஜினாமாவால் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், காங்கிரஸின் செய்தித் தொடர்பாளராக இருந்த பிரியங்கா சதுர்வேதி, ''தம்மிடம் தவறாக நடந்துகொண்ட நிர்வாகிகள் சிலரை, மீண்டும் நியமித்திருப்பது அதிருப்தி அளிக்கிறது'' என்று தெரிவித்து காங்கிரஸிலிருந்து விலகி, சிவசேனாவில் இணைந்தார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, மகாராஷ்டிரா காங்கிரஸிலிருந்து விலகிய நடிகை ஊர்மிளா, ''எனது அரசியல் மற்றும் சமூக நோக்கங்களை நான் செயல்படுத்த கட்சியில் உள்ள சுயநல சக்திகள் அனுமதிப்பதில்லை. மும்பை காங்கிரஸ் மிக உன்னதமான லட்சியத்துக்காகப் பணியாற்றுவதை விட்டுவிட்டு, மோசமான உள் அரசியலை எதிர்த்துப் போராடும் நிலைக்கே நான் தள்ளப்படுகிறேன்'' என்று ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

பிரியங்கா சதுர்வேதி, நடிகை ஊர்மிளா

பிரியங்கா சதுர்வேதி, ஊர்மிளாவைத் தொடர்ந்து இன்று பொதுச் செயலாளர் சத்யஜித் தேஷ்முக் கட்சியிலிருந்து விலகியிருப்பது காங்கிரஸில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் சட்டப்பேரவையின் தலைவராக இருந்த ஷிவாஜி ராவ் தேஷ்முக்கின் மகன்தான் சத்யஜித் தேஷ்முக். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்த சத்யஜித் தேஷ்முக், மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டியின் இளைஞர்களின் முகமாக வெளிப்பட்டவர்.

தனது விலகல் குறித்து சத்யஜித் ஏன்ஐயிடம் அளித்த பேட்டியில் கூறுகையில், ''நான் இன்றே பாஜகவில் இணையப் போவதில்லை. ஆனால் ஒரு சாதகமான முடிவை எடுப்பேன்.

நான் காங்கிரஸிலிருந்து விலகுவதற்கான முக்கியமான காரணம் அங்கு ஏற்பட்டுள்ள அதிருப்திதான். காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டு எனது ஆதரவாளர்களுக்காக என்று என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எதுவும் சாதிக்க முடியவில்லை. அதனால் அதற்கு ஏற்ற இடத்தைத் தேடி நான் செல்ல வேண்டியுள்ளது. காங்கிரஸில் இனியும் தொடர்வதில் அர்த்தமில்லை;

சாங்லி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள எனது மூத்த நிர்வாகிகளிடம் இதுகுறித்து கலந்துரையாடிவிட்டு பிறகு விரைவில் ஒரு சாதகமான முடிவை அறிவிப்பேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x