பிஹார் முதல்வர் பதவி: நிதிஷ் குமாருக்கு ஆதரவாக ட்வீட் செய்து நீக்கி, மீண்டும் ட்வீட் செய்த சுஷில் மோடி

பிஹார் முதல்வர் பதவி: நிதிஷ் குமாருக்கு ஆதரவாக ட்வீட் செய்து நீக்கி, மீண்டும் ட்வீட் செய்த சுஷில் மோடி
Updated on
1 min read

பாட்னா,

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17 ஆண்டுகளாக இடம் பிடித்து வந்தார் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் வேட்பாளராக மோடியை பாஜக தலைமை முன்னிறுத்தியதால் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

பிறகு முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) தலைவரான லாலு பிரசாத் யாதவுடன் இணைந்து பிஹாரில் மெகா கூட்டணி அமைத்தார். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிஹாரின் முதல்வர் ஆனார்.

ஆனால், லாலு கட்சியுடனான கருத்து வேறுபாடு காரணமாக மெகா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தார். அதன் பிறகு பாஜக கூட்டணி சார்பில் பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார். பாஜகவைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி துணை முதல்வராகப் பதவி வகித்து வருகிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி மெகா வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதற்குள்ளாக இரு கட்சிகளிடையே மோதல்கள் தொடங்கியுள்ளன.

பாஜக மூத்த தலைவர் சஞ்சய் பாஸ்வான் அண்மையில் கூறுகையில் ‘‘பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் நீண்டகாலமாகப் பதவி வகித்து விட்டார். அடுத்த தேர்தலில் அவர் வேறு ஒருவருக்கு வழிவிட வேண்டும். 2-ம் கட்டத் தலைவர் ஒருவரிடம் பொறுப்புகளை அவர் ஒப்படைக்க வேண்டும். ஐக்கிய ஜனதா தளமோ, பாஜகவோ அதைப் பற்றிக் கவலையில்லை. இரு கட்சிகளில் ஒருவரை முதல்வர் பதவியில் அமர அவர் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு பாஜக நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான சி.பி.தாகூர் கூறுகையில் ‘‘பிஹார் முதல்வர் பதவி இனிமேல் பாஜகவுக்குத்தான். அதனை ஐக்கிய ஜனதா தளக் கட்சிக்குக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை’’ எனக் கூறினார்.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும், பிஹார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி, நிதிஷ் குமாரை ஆதரித்து இன்று ட்வீட் செய்திருந்தார்.

நிதிஷ் குமாருக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சுஷில் குமார் மோடி தனது ட்வீட்டில், ‘‘2020-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நிதிஷ் குமாரே இருப்பார். இப்போது மட்டுமல்ல, எப்போதும் அவரே தலைவர்.

நிதிஷ் குமாருக்கு ஈடுகொடுக்க முடியாமல் எதிர்க்கட்சிகள் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. தலைமைப் பதவி குறித்து எங்கே கேள்வி எழுகிறது’’ எனத் தெரிவித்து இருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த ட்வீட்டை சுஷில் குமார் மோடி நீக்கிவிட்டார்.

இதனிடையே சிறிது நேரத்துக்கு பிறகு அதே ட்வீட்டை ரீட்வீட் செய்து சுஷில் குமார் மோடி பதிவிட்டார்.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in