Published : 11 Sep 2019 02:41 PM
Last Updated : 11 Sep 2019 02:41 PM

உன்னாவோ பலாத்கார வழக்கு விசாரணைக்காக டெல்லி எய்ம்ஸில் தற்காலிக நீதிமன்ற அறை அமைப்பு 

புதுடெல்லி,

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவோவைச் சேர்ந்த இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்ற அறை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ., குல்தீப் செங்கார் மீது சிறுமி (அப்போது அவருக்கு வயது 16) ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் தெரிவித்தார். உறவினர் ஒருவருடன் எம்.எல்.ஏ.,வின் வீட்டுக்கு வேலை கேட்டுச் சென்றபோது தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்தச் சிறுமி கூறினார்.

இந்த வழக்கில் புகார் கூறிய சிறுமியின் தந்தையையே போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலில் அவர் இறந்தார். தனது தந்தையை குல்தீப் செங்காரின் சகோதரர் அடித்துக் கொன்றதாக சிறுமியும் அவரது உறவினர்களும் புகார் கூறினர்.

ஆனால், போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 2018 ஏப்ரல் 8-ம் தேதி சிறுமியும் அவரது தாயாரும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகம் முன்னர் தீக்குளிக்க முயன்றனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பரவ, வழக்கு சிபிஐ வசம் சென்றது. சிபிஐ விசாரணையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. குல்தீப் செங்காரும் அவரது சகோதரர் அடுல் செங்காரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், உன்னாவோ இளம்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சென்ற கார் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியது. இதில் படுகாயமடைந்த இளம்பெண் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தொடர்ந்து தனக்கு நேர்ந்தது விபத்து அல்ல கொலை முயற்சி என்று குற்றம் சாட்டி வருகிறார்.

இந்நிலையில் உன்னாவோ நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளை டெல்லிக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 45 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அன்றாட விசாரணைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்ற அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு சிசிடிவி கேமராவை அணைத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உன்னாவோ இளம்பெண் சார்பில் 2 வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.

-ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x