

புதுடெல்லி
பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக வந்த 2,772 பரிசுப் பொருட்கள் செப்டம்பர் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் கூறியதாவது:
பிரதமர் மோடி செல்லும் இடங்களில் அவருக்கு பல்வேறு தரப்பினரும் அன்பளிப்பாக பல பொருட்களை தருகின்றனர். இந்த பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, கடந்த ஜனவரியில் 1800 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் 14 நாட்கள் இந்த ஏலம் நடந்தது. அதில் கிடைத்த தொகை அனைத்தும் கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அடுத்தகட்டமாக பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 2772 பொருட்கள் செப்டம்பர் 14-ம் தேதி முதல் ஏலத்தில் விடப்படுகிறது.
இந்த பொருட்களின் அடிப்படை விலையை பொறுத்தவரையில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 200-ம் அதிகபட்ச தொகையாக ரூ. 2.5 லட்சமும் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோடி குஜராத் முதல்வராக பதவி வகித்து வரும் காலம் முதலே தனக்கு அன்பளிப்பாக வரும் பொருட்களை ஏலத்தில் விட்டு அதில் கிடைக்கும் தொகையை பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவியாக அளித்து வருகிறார்.