Published : 11 Sep 2019 01:33 PM
Last Updated : 11 Sep 2019 01:33 PM

பரூக் அப்துல்லா குறித்த வைகோவின் ஆட்கொணர்வு மனு: விசாரணைக்கு ஏற்பதா? தலைமை நீதிபதி முடிவெடுப்பார்

சென்னை,

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்பிடித்து தரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சார்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரணைக்கு ஏற்பது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்பதால் உடனடியாக விசாரணைக்கு வர வாய்ப்பில்லை.

காஷ்மீரில் அம்மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, சட்டப்பிரிவு 370 திருத்தப்பட்டது. மாநிலம் ஜம்மு மற்றும் லடாக் என யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பியபோது அவர் வீட்டுக்காவலில் இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்திருந்தார்.

காஷ்மீரில் எதிர்க்கட்சித் தலைவர்கள் யாரையும் தொடர்புகொள்ள இயலாத நிலையில் சிபிஎம் தலைவர் தாரிகாமியை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சீதாராம் யெச்சூரி ஆட்கொணர்வு மனு அளித்திருந்தார். அதை ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததன்பேரில் தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மதிமுக நடத்தும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்திற்கு வர ஒப்புக்கொண்ட காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைத் தொடர்புகொள்ள இயலாததால் ஆட்கொணர்வு மனு ஒன்றை வைகோ தாக்கல் செய்து அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து மதிமுக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

''மதிமுக சார்பில், வரும் 15-ம் அன்று அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால், காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்து உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்கிறோம்''.

இவ்வாறு மதிமுக தெரிவித்துள்ளது.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி மூத்த நீதிபதி ரமணா முன்பு முறையிச் சென்றனர், ஆனால் நீதிபதி ரமணா அரசியல் சார்பான இதுபோன்ற முக்கியமான மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்தான் முடிவெடுக்க வேண்டும். தான் முறையீட்டை ஏற்க முடியாது. நீங்கள் தலைமை நீதிபதியிடம் முறையிடலாம் எனத் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு இன்று காலையில் விசாரணைக்காக அமரவில்லை. மதியம் 2 மணி வரையிலான அமர்வுக்கான வழக்குகள் எதுவும் பட்டியலிடப்படவில்லை. மதியம் 2 மணிக்கு மேல் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு அமரும். தற்போது அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் இன்று அவசர வழக்காக விசாரிக்க வாய்ப்பில்லை.

வழக்கை எடுத்துக்கொள்வது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுத்து அதன்பின்னர் அவரது அமர்வுக்கோ அல்லது அடுத்த அமர்வுக்கோ பட்டியலிடப்படும்.

தற்போதுள்ள நிலையில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரும் மனு மீது உடனடியாக உத்தரவிட வாய்ப்பில்லை. பட்டியலிடப்பட்டு இந்த வழக்கு விசாரணைக்கு வர சில நாட்கள் ஆகலாம் என உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x