

ஜம்மு,
ஜம்முவின் 10 மாவட்டங்களில் இயல்பு நிலை நிலவுவதாக ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 5-ல் ஜம்மு -காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இத்துடன் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த அறிவிப்புகளுக்குப் பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி வசதி, இணைய வசதி துண்டிப்பு, ஊரடங்கு உத்தரவு என பல கெடுபிடிகள் அமலில் இருந்தன.
இந்நிலையில், ஜம்மு மாவட்டத்தின் நிலவரம் குறித்து டிஜிபி தில்பக் சிங் செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர், "ஜம்முவின் 10 மாவட்டங்களிலும் இயல்பு நிலை முற்றிலும் திரும்பியுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்குகின்றன. கார்கில், லே பகுதிகளில் அமைதி நிலவுகிறது. அங்கு கெடுபிடிகள் ஏதுமில்லை. 90%-க்கும் மேற்பட்ட பகுதிகளில் தடை ஏதும் இல்லை. 100% தொலைபேசி சேவை கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் "சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பின்னர் சட்டம் ஒழுங்கு அத்துமீறல் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதுவரை 184 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 6 சம்பவங்கள் மட்டும் குறிப்பிடத்தக்க அளவு பெரிய வன்முறைச் சம்பவங்கள்" என்றார்.
லஷ்கர் தீவிரவாதி ஆசிஃப் சுட்டுக்கொலை..
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரின் சோபோர் மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் அச்சுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வந்த லஷ்கர் பயங்கரவாதி ஆசிப் இன்று காலை போலீஸ் பிடியிலிருந்து தப்பியோட முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
போலீஸார் அவரைக் கண்டுபிடித்தபோது அவர்கள் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு அவர் தப்ப முயன்றுள்ளார். இதில் 2 காவலர்கள் காயமடைந்தனர். போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஆசிஃப் கொல்லப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோப்பூரில் பழக்கடை வியாபாரி ஒருவரின் குடும்பத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கும்பலில் ஆசிஃப் தேடப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏஎன்ஐ