

புதுடெல்லி,
நாட்டை 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதமாகக் குறைந்தது. முதல் காலாண்டில் உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சியும் ஜூலை மாதத்தில் 2.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது.
மேலும், ஆட்டோமொபைல் துறையின் ஆகஸ்ட் மாத விற்பனையில் அனைத்து நிறுவனங்களின் விற்பனையும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி நிறுவனம் தனது கார் தயாரிப்பை இரு நாட்கள் நிறுத்தியுள்ளது. அதேபோல அசோக் லேலண்டன் நிறுவனமும் தனது தொழிற்சாலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இந்தநிலையில் 2-வது முறையாக மத்தியில் பதவி ஏற்றுள்ள பாஜக அரசு 100 நாட்களை எட்டியுள்ளதையடுத்து, அதன் சாதனைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விளக்கிக்கூறினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்ட சரிவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்துவருகிறது. ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய தேக்கம் உருவாவதற்கு உபர், ஓலா நிறுவனங்கள் காரணமாக இருக்கின்றன. மக்கள் சொந்தமாக கார் வாங்கி மாதத் தவணை கட்டுவதற்குப் பதிலாக, இதுபோன்ற வாடகைக் கார்களில் பயணிக்க விரும்புகிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
இதை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி ட்விட்டரில் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறுகையில் " பாஜகவின் நிதியமைச்சர் பொருளாதாரத்தை கையாண்ட விதத்துக்கு அனைவர் மீதும் பழிபோடுங்கள். வாக்காளர்களையும் குற்றம்சாட்டுங்கள். மோடிஜி ட்விட்டரில் உங்களைப் பின்தொடர்பவர்கள் 5 கோடியைக் கடந்துவிட்டார்கள். பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாறுமா, எப்படி மாறப்போகிறது. இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்த விஷயத்துக்கும் எதிர்க்கட்சிகள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என சொல்லப் போகிறீர்களா?, உபர், ஓலா சேர்ந்து பொருளாதாரம் அனைத்தையும் அழித்துவிட்டதா?
நல்ல விஷயங்கள் என்ன நடந்தாலும் அது தங்களால் (மோடி நாமிக்ஸ்) நடந்தது என்று பாஜக கூறுகிறது. என்ன மாதிரியான மோசமான சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு மற்றவர்கள் காரணம் (நிர்மலா நாமிக்ஸ்). பின் எதற்காக மக்கள் உங்களைத் தேர்வு செய்தார்கள்(பப்ளிக் நாமிக்ஸ்)?" என அபிஷேக் மனு சிங்வி கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் " பஸ், டிரக் விற்பனை குறைந்து போனதற்கும், வீழ்ச்சி அடைந்ததற்கும் மக்கள் அதை பயன்படுத்திய மக்கள் வாங்காமல் நிறுத்தியதுதான் காரணமா. இதுசரியான வாதமாக நிதியமைச்சரே. முதலீட்டாளர்களின் முதலீட்டைபாதுகாப்பதாக உறுதியளித்து, அரசின் மோசமான கொள்கைகளால், கடந்த 100 நாட்களில்பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் ரூ.12.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கடுமையான வரிவிதிப்பு போன்றவை தான் உண்மையான காரணம்" எனத் தெரிவித்துள்ளது.
ஏஎன்ஐ