Published : 11 Sep 2019 12:24 PM
Last Updated : 11 Sep 2019 12:24 PM

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்து தரக் கோரி வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி நீக்கியது. மேலும், காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக அங்கு 144 தடை உத்தரவையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு விதித்தது. மேலும், அங்கு கூடுதல் எண்ணிக்கையில் பாதுகாப்புப் படையினரும், ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். மேலும், காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. எனினும் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்நிலையில், பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தரக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

பரூக் அப்துல்லா: கோப்புப்படம்

இதுதொடர்பாக, மதிமுக தலைமைக்கழகம் இன்று (செப்.11) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மதிமுகவின் சார்பில், 2019 செப்டம்பர் 15 அன்று அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை - நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்புகொள்ளும் நிலையில் இல்லை.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x