Published : 11 Sep 2019 12:22 PM
Last Updated : 11 Sep 2019 12:22 PM

காஷ்மீர் விவகாரத்தில் ராஜினாமா செய்த ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதனுக்கு நோட்டீஸ்: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி,

காஷ்மீர் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டி தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் அனுப்பப்பட்ட அந்த நோட்டீஸில் கடமையிலிருந்து தவறுதல், தவறான நடத்தை, வேலையை சரிவரச் செய்யாதிருத்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டு விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸுக்குப் பின்புதான் கண்ணன் கோபிநாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளவின் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். 2012-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ஜில் தேர்வாகினார். 2018-ம் ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்தபோது, தன்னுடைய அடையாளத்தை மறைத்து, தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் நிவாரண முகாமில் ஒரு மாதம் பணியாற்றினார் கண்ணன். அதன்பின்புதான் இவர் ஐஏஎஸ் அதிகாரி என்பதே அனைவருக்கும் தெரிந்தது. அதன்பின் நிவாரணமாக ரூ. ஒரு கோடி வழங்கினார் கண்ணன்.

காஷ்மீர் மாநிலத்தில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதால் அடிப்படை உரிமைகள் பறிபோகின்றன என்று கண்ணன் சுட்டிக்காட்டினார். இந்த விஷயத்தைக் காரணம் காட்டி, கடந்த மாதம் 5-ம் தேதி கண்ணன் தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 8-ம் தேதி கண்ணன் கோபிநாதனுக்கு மத்திய அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது யூனியன் பிரதேசமான தாதர் நாகர் ஹாவேலியில் பணியாற்றிவந்த கண்ணன் கோபிநாதன் தனது கடமையில் இருந்து தவறியதால் விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

தாத்ரா நகர் ஹாவேலியில் உள்ள மின்துறை மற்றும் மரபுசாரா எரிசக்தி துறைச் செயலாளராக கண்ணன் கோபிநாதன் பணியாற்றி வந்தார். ஆனால், கண்ணன் கோபிநாதன் தனது கடமையை சரிவரச் செய்யாதிருத்தல், புறக்கணித்தல் போன்ற புகார்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தாத்ராநகர் ஹாவேலி, டையூ டாமன் ஆகிய யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 11-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு டையூ டாமன் மற்றும் தாத்ரா நாகர் ஹாவேலி ஆகிய இரு யூனியன் பிரதேசங்கள் கடிதம் எழுதியுள்ளன. அதில் கோபிநாதன், உயர் அதிகாரிகளுக்கு கீழ்பணியாமல் இருக்கிறார், கடமையைப் புறக்கணிக்கத் தேவையான குறுக்கு வழிகளைப் பின்பற்றுகிறார் என்று புகார்களாகக் குறிப்பிட்டு இருந்தன.

நிரந்தரக் குடியுரிமைச் சான்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை முறையாக வழங்காமல் 9 மாத காலம் தாமதம் செய்தார் கண்ணன் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாதர் நகர் ஹாவேலியில் உள்ள நரோலி முதல் சாஹேத் சவுக், சாமர்வானி பகுதிக்கு பூமிக்கு அடியில் கேபிள்கள் பதிக்க வேண்டும், மின்கம்பங்கள் நடுவது உள்ளிட் பல்வேறு பணியையும் அவர் 2018 மார்ச் மாதத்துக்குள் முடிக்கவில்லை. இதனால் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு அந்த காலக்கெடு மாற்றப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் கோபிநாதன் எந்த விதமான அறிக்கை, தகவல் தொடர்புகள் ஆகியவற்றை தனக்கு நேரடியாக இருக்கும் மேலதிகாரிகளிடம் தெரிவிப்பது இல்லை. இது முறையற்ற வழியாகும் என்றும் கண்ணன் கோபிநாதன் மீது புகார்கள் எழுந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல் 2018-ம் ஆண்டு கேரளா வெள்ளத்தின்போது, அங்கு பணியாற்ற கண்ணன் கோபிநாதன் சென்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு யூனியன் பிரதேச நிர்வாகம் சார்பில் உதவலாம் என்று அறியச் சென்றார், ஆனால், அங்கிருந்து திரும்பி வந்தபோது, கேரள மக்களுக்கு உதவி செய்வது குறித்தும், செய்தது குறித்தும் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.

மேலும், பல்வேறு பிரிவுகளில் பிரதமர் விருதுக்கானவர்களைத் தேர்வு செய்ய பட்டியல் தயாரிக்கக் கோரி உத்தரவிடப்பட்டும், கண்ணன் கோபிநாதன் அதைத் தயாரிக்கவில்லை என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கண்ணன் கோபிநாதனுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டது. அதில் அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் கண்ணன் கோபிநாதன் தனது கடமையில் இருந்து தவறியதால், ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த நோட்டீஸ் கிடைத்த 10 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும். தனது விளக்கத்தை டையூ டாமன், தாதர் நாகர் ஹாவேலியில் உள்ள நிர்வாகியின் ஆலோசகருக்கு கண்ணன் கோபிநாதன் வழங்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x