Published : 11 Sep 2019 12:11 PM
Last Updated : 11 Sep 2019 12:11 PM

சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரிசெய்த ம.பி. அமைச்சர்: வைரலான வீடியோவால் நெட்டிசன்கள் பாராட்டு

இந்தூர்,

போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கித் தவித்தபோது, சாலையில் இறங்கி போக்குவரத்தை சரிசெய்யும் மத்தியப் பிரதேச அமைச்சரின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

சாதாரணமாக அமைச்சர்கள் செல்வதனாலேயே சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தூர் நகரில் நேற்றிரவு நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த அமைச்சர் ஒருவர் தனது காரை விட்டு இறங்கிச் சென்று போக்குவரத்தை ஒழுங்கு செய்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உயர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஜீது பட்வாரி. இவர் நேற்று இந்தூர் நகரில் ஒரு முக்கிய அரசு விழாவில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருந்தார். விழாவுக்கு சரியான நேரத்தில் செல்லவேண்டுமென்ற அவசர கதியில் அவர் கார் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ சென்றுகொண்டிருந்தது.

இத்தனைக்கும் அவர்கள் மற்ற எந்த வாகனங்களுக்கும் இடையூறு செய்யாமல் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அபே சாலையை நெருங்கும்போது நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்ததைப் பார்த்த அமைச்சர் கண்ணாடியை இறக்கி அவ்வழியே வந்தவர்களை விசாரித்தார்.

'கடுமையான போக்குவரத்து நெரிசல்' என்று பதில் வரவே திடீரென அமைச்சரே காரை விட்டு இறங்கினார். வேகவேகமாகச் சென்றவர் நெரிசலாகி குழம்பிக் கிடக்கும் போக்குவரத்தை சரிசெய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் காவலர் அருகே சென்றார்.

உண்மையில் அவர் காவலரைத்தான் ஏதோ சொல்லப் போகிறார் என்று அங்குள்ளவர்கள் நினைத்தனர். ஆனால் நடந்ததே வேறு. வாகனங்களை திசை திருப்பி போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் பணியை அமைச்சரே மேற்கொள்ளத் தொடங்கினார். சிறிது நேரத்தில் சாலை போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.

இதைப் பார்த்த பொதுமக்கள் வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட அமைச்சரது சேவையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர். அமைச்சர் போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காட்சியைக் கண்ட நெட்டிசன்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x