செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 11:26 am

Updated : : 11 Sep 2019 11:26 am

 

நாட்டில் வேலையின்மை குறித்த புள்ளிவிவரங்கள் தவறானவை; யாரும் வேலையிழக்கவில்லை: மத்திய அமைச்சர் உறுதி

unemployment-data-incorrect-no-one-losing-jobs-says-nityanand-rai
மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் நேற்று போபால் நகரில் பேட்டி அளித்த காட்சி

போபால்,

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய், நாட்டில் வேலையின்மை குறித்து வரும் புள்ளிவிவரங்கள் தவறானவை. யாரும் வேலையிழக்கவில்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் போபால் நகரில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''நாட்டில் வேலையின்மை நிலவுகிறது என்றும், வேலையின்மை குறித்து வெளியான புள்ளிவிவரங்களும் தவறானவை. ஒருவர் கூட வேலையிழக்கவில்லை. நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருகின்றன, பல்வேறு துறைகளிலும், மிகப்பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.

வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளது. கோடிக்கணக்கான மக்கள் முத்ரா திட்டத்தில் கடன் பெற்று தொழில் செய்து வருகிறார்கள். இவை அனைத்தும் வேலைவாய்ப்பு பெருகியதைக் காட்டுகிறது.


இந்த தேசம் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது. நாட்டில் சில துறைகளில் இருக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அரசு சரி செய்து வருகிறது. பொருளாதாரச் சூழலை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது, அது தொடரும்.

சந்திரயான்-2 திட்டத்தின் வெற்றியை ஒவ்வொருவரும் புகழ்ந்து வருகிறார்கள். சந்திரனின் வடதுருவத்தில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்தி வரும் நிலையில், தென் துருவத்தில் இந்தியா கால்பதிக்க முயன்றது. நிலவில் 2.1 கி.மீ தொலைவில் தடம் பதிக்க இருந்தபோது, விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பில் இருந்து தப்பியது. ஆனால், ஆர்பிட்டர் தொடர்ந்து சமிக்ஞைகளை அனுப்பி வருகிறது. பல புதிய புகைப்படங்களையும் எடுத்து அனுப்பி வருகிறது. சந்திரயான்-2 திட்டத்தை நம்முடைய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக்க முயற்சி மேற்கொண்டனர்.

சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் 7 வழக்குகளை மத்திய அரசு மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதில் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத்துக்கும் தொடர்பு இருக்கிறது. குற்றவாளி இல்லாதவர்கள், குற்றம் செய்யாதவர்கள் அச்சப்படத் தேவையில்லை. சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கும்

ஜம்மு காஷ்மீரில் 370-வது பிரிவை நீக்கியதன் மூலம் தேசத்தின் ஒற்றுமை வலுப்பட்டுள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பப்பட்டும், அங்கு வளர்ச்சி இல்லை. ஆனால், இந்தியாவின் நீரோட்டத்தில் இணைந்ததன் மூலம் இனிமேல் தீவிரவாதம் இருக்காது, வளர்ச்சி மட்டுமே இருக்கும்''.

இவ்வாறு நித்தியானந்த் ராய் பேசினார்.

- சித்தார்த் யாதவ்.

Unemployment data incorrectNo one losing jobsHome Affairs Nityanand RaiLosing jobs.Hobbling economyவேலையின்மைபுள்ளிவிவரங்கள்மத்திய அமைச்சர் உறுதி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author