

காந்திநகர்,
குஜராத் மாநிலத்தில் 110 அணைகள் நிரம்பியுள்ள நிலையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
குஜராத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இதுவரை 110 சதவீதம் அளவுக்கு தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பரூச் உள்ளிட்ட வறண்ட மாவட்டங்களில் கூட பலத்த மழை பெய்துள்ளது.
கனமழையால் மாநிலத்தில் உள்ள 110 அணைகள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த அணைகள் முழுவதும் திறந்து விடப்பட்டு வருகிறது. மாநிலத்தில் மிகப்பெரிய அணையான சர்தார் சரோவர் அணையும் நிரம்பியுள்ளது.
நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகும். இந்த அணையின் மொத்த உயரம் 138.6 மீட்டர் ஆகும். அணையில் 136 மீட்டர் உயரத்துக்கு நீர் தேக்க முடியும். இந்த அணையின் மூலம் குஜராத் மட்டுமின்றி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
இந்த அணை தற்போது முழு கொள்ளவை எட்டியுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அணைக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மொத்த நீர்மட்டமான 136 மீட்டரை எட்டும் தருவாயில் உள்ளதால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து விநாடிக்கு 10 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதனால் குஜராத் மாநிலத்தின் வதோதரா, பரூச் மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழல் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.