Published : 11 Sep 2019 08:58 AM
Last Updated : 11 Sep 2019 08:58 AM

81 வயது முதியவர் வேடத்தில் வேலை தேடி அமெரிக்கா செல்ல முயன்ற இளைஞர் கைது

புதுடெல்லி

முதியவர் வேடத்தில் அமெரிக்கா செல்ல முயன்ற 32 வயது இளைஞரை டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதா பாத்தை சேர்ந்தவர் ஜெயேஷ் படேல் (32). இவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்ரிக் சிங் என்ற பெயரில் 81 வயது முதியவரை போன்று நியூயார்க் செல்ல டெல்லி விமான நிலையம் வந்துள்ளார்.

வெள்ளை தாடி, கண்ணாடி மற்றும் தலையில் டர்பனுடன் சக்கர நாற்காலியில் வந்த ஜெயேஷ் படேல் மீது சிஐஎஸ்எப் வீரர்கள் முதலில் சந்தேகம் அடையவில்லை. இதனால் அவர் முதல்கட்ட சோத னையை கடந்துவிட்டார். மேலும் குடியேற்றத்துறை அதிகாரிகளும் அனுமதி அளித்துவிட்டனர். என்றாலும் முழுமையான சோத னையில் அவர் சிக்கிக் கொண்டார்.

இது தொடர்பாக சிஐஎஸ்எப் செய்தித் தொடர்பாளர் ஹேமேந்திர சிங் கூறும்போது, “ஜெயேஷ் படேல் முதியவரை போலவே இருந்தாலும் அவரது குரல் ஒத்துப் போகவில்லை. மேலும் அவரது தோல் இளமையாக இருந்தது. முகத்தில் எந்த சுருக்கமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்து அவரை முழுமையாக சோதனையிட்டோம்” என்றார்.

வேலைதேடி அமெரிக்கா செல்ல ஜெயேஷ் படேல் முயன்றுள்ளார். ஆனால் அவருக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் அவரை குறுக்கு வழியில் பத்திரமாக அமெரிக்கா அனுப்பி வைப்பதாக பாரத் என்ற ஏஜென்ட் உறுதி அளித்துள்ளார். அமெரிக்கா
சென்றவுடன் தனக்கு ரூ.30 லட்சம் அனுப்பி வைக்க வேண்டும் என ஜெயேஷிடம் பாரத் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதையடுத்து அம்ரிக் சிங் என்ற பெயரில் போலி முகவரியில் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களை இருவரும் தயார்
செய்துள்ளனர். இதன் அடிப்படையில் விசாவும் பெற்றுள்ளனர். அமெரிக்கா புறப்படுவதற்கு முன் டெல்லியில் ஹோட்டல் அறை
ஒன்றில் ஜெயேஷ் படேலுக்கு ஒப்பனை கலைஞர் ஒருவர் முதியவராக மேக்கப் போட்டுள்ளார். மேலும் முதியவரை போல நடக்க வேண்டும் என அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சய் பாட்டியா கூறும்போது, “டெல்லி விமான நிலையத்தில் இதுபோன்ற ஒரு வழக்கை சந்திப்பது இதுவே முதல்முறை” என்றார்.

இந்த மோசடி தொடர்பாக ஜெயேஷ் படேலை போலீஸார் கைது செய்தனர். ஏஜென்ட் பாரத், அவரது உதவியாளர் மற்றும் ஒப்பனை கலைஞரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x