

புதுடெல்லி
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்குகளை சிறப்பு புலனாய்வுக் குழு மீண்டும் விசாரிக்க உள்ளது. இதில் மத்தியபிரதேச முதல்வர் கமல் நாத்துக்கு எதிரான வழக்கும் இடம்பெற்றிருப்பதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 1984-ம் ஆண்டு அக்டோ பர் 31-ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக மூண்ட கலவரத்தில் டெல்லியில் மட்டும் 2,733 பேர் கொல்லப்பட்டனர். இதை யொட்டி டெல்லியில் பதிவு செய்யப் பட்ட வழக்குகளில் போதிய ஆதா ரங்கள் இல்லை என 241 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.
இந்நிலையில் நீதிபதி ஜி.பி.மாத்தூர் குழு பரிந்துரையின் பேரில், மூடப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க கடந்த 2015 பிப்ரவரியில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இக்குழு இதுவரை 80 வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில் மேலும் 7 வழக்குகளை மறு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள எஸ்ஐடி முடிவு செய்துள்ளது. இதில் ம.பி. முதல்வர் கமல் நாத்துக்கு எதிரான ஒரு வழக்கும் இடம்பெற்றுள்ளது.
டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பதிவு செய் யப்பட்டுள்ள இந்த வழக்கில் 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு கமல் நாத் தனது வீட்டில் அடைக்கலம் அளித்ததாக புகார் உள்ளது. ஆனால் போதிய ஆதாரங்கள் இன்றி இந்த 5 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரு வதையொட்டி கமல் நாத்தை காங் கிரஸ் தலைமை பதவி விலகச் செய்ய வேண்டும் என சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவரும் டெல்லி எம்எல்ஏவுமான மன்ஜிந்தர் சிங் சிர்ஸா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மன்ஜிந்தர் சிங் கூறும்போது, “கலவரத்தில் கமல்நாத்தின் பங்கு குறித்து சாட்சி யம் அளிக்க சஞ்சய் சூரி, முக்தி யார் சிங் ஆகிய இருவர் தயாராக உள்ளனர். இவர்களில் சஞ்சய் சிங் தற்போது பிரிட்டனில் வசிக்கிறார். முக்தியார் சிங் பாட்னாவில் உள் ளார். இருவரிடமும் நான் பேசி னேன். அவர்கள் எஸ்ஐடி முன் ஆஜராக தயாராக உள்ளனர்” என்றார்.
டெல்லியில் உள்ள ரகாப் கஞ்ச் குருத்வாராவில் ஒரு கும்பல் புகுந்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு இதுவாகும். இந்த குருத்வாரா நிர்வாகக் குழு தலைவராக மன்ஜிந்தர் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ம.பி. முதல்வர் கமல் நாத், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்கெ னவே மறுத்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசார ணைக்கு வருவதால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.