Published : 10 Sep 2019 06:41 PM
Last Updated : 10 Sep 2019 06:41 PM

அபராதத்துடன் இலவச ஹெல்மெட்: ஒடிசா போலீஸார் புதிய நடவடிக்கை

புவனேஸ்வர்
ஒடிசாவில் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்து அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு போலீஸார் இன்று ஒருநாள் இலவசமாக ஹெல்மெட் வழங்கினர்.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஒடிசாவில் சத்தீஸ்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.

டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரித்தார். இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு மாநிலமாக புதிய வாகனச் சட்டத்தை அமல்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் ஒடிசா மாநிலத்திலும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இங்கு ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.


புவனேஸ்வரில் இன்று ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டிய பலரிடம் இருந்தும் அபராத தொகை வசூலிக்கப்பட்டது. எனினும் ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டி சிக்கியவர்களுக்கு அபராதம் செலுத்தி பிறகு இன்று ஒருநாள் ஒடிசா போலீஸார் இலவசமாக ஹெல்மெட்டுகளை வழங்கினர். இனிமேல் ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்யக்கூடாது எனவும் அவர்களுக்கு அறிவுரை கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x