Published : 10 Sep 2019 05:47 PM
Last Updated : 10 Sep 2019 05:47 PM

இஸ்ரோ தலைவர் சிவனை ஆரத் தழுவிய பிரதமர் மோடி: கார்ட்டூன் வெளியிட்ட அமுல்

சந்திராயன் நிகழ்வில், இஸ்ரோ தலைவர் சிவனை பிரதமர் மோடி ஆரத் தழுவியது குறித்து அமுல், கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய 'சந்திரயான்-2' விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது.

கடந்த மாதம் 20-ம் தேதி 'சந்திரயான்-2' விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதன்பிறகு படிப்படியாக 5 முறை 'சந்திரயான்-2' விண்கலத்தின் நிலவின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது. கடந்த 2-ம் தேதி ‘சந்திரயான்-2’ விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

'சந்திரயான்-2' விண்கலத் திட்டத்தின் முக்கிய மற்றும் சவாலான நிகழ்வு கடந்த சனிக்கிழமை அதிகாலையில் நடப்பதாக இருந்த நிலையில், லேண்டர் விக்ரமிடம் இருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டது.

நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் இறங்கும் நிகழ்வைப் பார்வையிட பிரதமர் மோடி இஸ்ரோ வந்திருந்தார். அவர் பெங்களூரு மையத்தில் பேசிவிட்டுப் புறப்படும்போது, இஸ்ரோ தலைவர் சிவன் கண்ணீர் விட்டு அழுதார். உடனே சிவனைத் தன் தோள் மீது சாய்த்து அரவணைத்துத் தேற்றினார் பிரதமர் மோடி. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இந்நிலையில் இதுகுறித்து அமுல் நிறுவனம் கார்ட்டூன் வெளியிட்டுள்ளது. அதில் 'சந்திரனையும் நட்சத்திரங்களையும் தொட ஆசை!' என்ற வாக்கியங்களுடன் மோடி, சிவனை ஆரத் தழுவி ஆறுதல் கூறுகிறார்.

''சந்திரயான் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது.. இந்தத் திட்டம் விரைவில் முழுமை பெறும்!'' என்றும் அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல பால் நிறுவனமான அமுல், நாட்டு நடப்புடன் தொடர்புடைய நிகழ்வுகளை நகைச்சுவையாகவும் யோசிக்க வைக்கும் விதத்திலும் கார்ட்டூன்களாக வெளியிடுவதில் புகழ்பெற்றது. அந்த வகையில், அமுல் வெளியிட்ட மோடி மற்றும் சிவனின் கார்ட்டூன் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x