Published : 10 Sep 2019 03:31 PM
Last Updated : 10 Sep 2019 03:31 PM

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் உள்பட முக்கியத் தலைவர் பொறுப்புகளுக்கு தேர்தல் அவசியம்: சசி தரூர் கருத்து

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்பட முக்கியத் தலைவர்கள் பொறுப்புகளுக்கு தேர்தல் அவசியம் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. 'இந்து வழி மற்றும் இந்துத்துவாவின் அறிமுகம்' என்ற தலைப்பில் உருவான புத்தகதத்தை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் இடையே நிருபர்களுக்கு சசி தரூர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமிக்கப்பட்டு இருப்பது மிகச்சிறந்தது, தகுதியானவர்தான் அந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்ற முந்தைய கடினமான நேரங்களில் கட்சிக்குத் தலைவராகப் பொறுப்பேற்ற சோனியா காந்தி, தன்னுடைய தலைமையை, திறமையை நிரூபித்துள்ளார். பல்வேறு தரப்பட்ட காங்கிரஸ் கட்சியின் குரல்களை ஒருங்கிணைத்தவர். இப்போதுள்ள சூழலுக்கு சோனியாவின் தலைமை அவசியம்.

அதேநேரத்தில் அடிக்கடி நான் ஒன்றைக் குறிப்பிட்டு வருகிறேன். கட்சி உறுப்பினர்கள் இடையே சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தி காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பதவி முதல் முக்கியத் தலைவர் பதவி வரை தேர்வு செய்யப்படுவது அவசியம்.

காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவது, புதிதாக கட்சிக்குள் வரும் இளம் தலைவர்களுக்கு ஊக்கமாக அமையும். கட்சியை எளிதாக வழிநடத்திச் செல்லலாம்.

காங்கிரஸ் கட்சிக்குள் புதிய உத்வேகத்தைப் பாய்ச்சுவதுபோல் இருக்கும். இந்தக் கருத்தை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். விரைவில் தேர்தல் நடக்கும் என்று நான் நம்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கட்சி தீவிரமாகச் செயலாற்றும்.

பிரதமர் மோடி குறித்து புகழ்ந்தும் பேசி இருக்கிறேன். கடுமையான விமர்சனங்களையும் வைத்திருக்கிறேன். மோடி அரசின் குறைபாடுகள் குறித்து 500 பக்கங்களில் ஒரு நூலாக 'தி பாரடாக்ஸியல் பிரைம்மினிஸ்டர்' என்று எழுதியுள்ளேன்.

என்னுடைய நண்பர் சல்மான் குர்ஷித் கூறிய கருத்தில் நான் உடன்படுகிறேன். கடந்த 2014-ம் ஆண்டில் 31 சதவீதமாக இருந்த தனது வாக்கு சதவீதத்தை 2019-ம் ஆண்டில் 37 சதவீதமா மோடி மாற்றியுள்ளார். இரு தேர்தலில் பாஜக 19 சதவீதம் வரை முன்னேறியுள்ளது. காங்கிரஸ் கட்சியும் அதைப் புரிந்துகொண்டு நம்மால் ஏன் செயல்பட முடியவில்லை என்று சிந்திக்க வேண்டும்.

பிரதமர் மோடி தங்களுக்கு ஏதாவது செய்வார் என நினைத்துதான் மக்கள் வாக்களித்துள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அதற்கான வரையறைகள் இருக்கின்றன. மோடி கழிப்பறைகளை கிராமத்தில் எழுப்பினார். ஆனால், 60 சதவீதம் கழிப்பறையில் தண்ணீர் இல்லை. கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் வழங்கினார். ஆனால் 92 சதவீதம் பெண்களால் அதை மீண்டும் நிரப்ப முடியவில்லை.

மோடி மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்தும், கொள்கைகளைப் பற்றி பேசியும் மக்கள் வாக்களித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியால் வாக்குகளைப் பெற முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி முற்போக்கு உடைய, மதச்சார்பற்ற தன்மை கொண்ட, சுதந்திரமான சிந்தனை கொண்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும். காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களை ஈர்க்க இதுவும் போதாது. மக்களிடம் இழந்த நம்பிக்கையைப் பெற வேண்டும்''.

இவ்வாறு சசி தரூர் பேசினார்


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x