

மும்பை
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் இன்று ஆலோசனை நடத்தினர்.
மகாராஷ்டிராவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு தற்போது ஆளும் பாஜக- சிவசேனா கட்சிகள் மீ்ண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதுபோலவே எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஓரணியில் தேர்தலை சந்திக்கவுள்ளன.
இரு அணியிலும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. அடுத்தடுத்த கட்டங்களில் பேச்சுவார்த்தை முடிந்து போட்டியிடும் தொகுதிகள் இறுதி செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலிலும் நான்கு கட்சிகளும் 2 அணிகளாக தேர்தலை சந்தித்தன. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிட்ட பாஜக 23 தொகுதிகளிலும், சிவசேனா 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அதேசமயம் தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன. ஏஎம்ஐஎம் ஓரிடத்திலும் சுயேச்சை ஓரிடத்திலும் வெற்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனாவும் தனித்து போட்டியிட்டன. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக 122 இடங்களிலும் சிவசேனா 63 இடங்ளகிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து இருகட்சிகளும் ஆட்சி நடத்தி வருகின்றன.