

புதுடெல்லி,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பல்தேவ் குமார் குடும்பத்துடன் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., பல்தேவ் குமார். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர். கைபர் பக்துவான் மாகாணத்தின் எம்.எல்.ஏ.,வாக இருந்த பல்தேவ் குமார் மீது 2016-ல் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 2018-ல் அது போலி என நிரூபணமானதால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் தற்போது குடும்பத்துடன் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியாவில் தஞ்சம் கோரியுள்ளார்.
தனது நிலை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "பாகிஸ்தானில் இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையின மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்படுகின்றனர்.
அங்கு முஸ்லிம்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் கடினமான சூழலில் வாழ்ந்தோம். இந்திய அரசாங்கம் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும். நாங்கள் இங்கிருந்து திரும்பிச் செல்ல மாட்டோம்.
பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்களுக்கு இந்திய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை அறிவிக்க வேண்டும். பாகிஸ்தானின் சிறுபான்மையினரைக் காக்க மோடி உதவ வேண்டும். அங்கே இந்துக்களும், சீக்கியர்களும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
எனது சகோதரர்கள் இன்னும் அங்கு இருக்கிறார்கள். அங்குள்ள சீக்கிய, இந்து குடும்பங்கள் இந்தியாவுக்குத் திரும்பவே விரும்புகின்றன. அங்கு சிறுபான்மையினருக்கு மரியாதை இல்லை. கட்டாய மதமாற்றங்கள் நடக்கின்றன. குருத்வாராக்கள் மோசமான நிலையில் இருக்கின்றன" எனக் கூறினர்.
பாகிஸ்தானில் அண்மையில் சீக்கிய பெண் ஒருவர் கட்டாயமாக இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், அந்நாட்டுப் பிரதமரின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஒருவர் மோடி உதவியை நாடி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
- ஏஎன்ஐ