Published : 10 Sep 2019 01:25 PM
Last Updated : 10 Sep 2019 01:25 PM

அபராதத்துக்குப் பயந்து தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டும் இளைஞர்

அலிகார்,

மீண்டும் அபராதம் விதிக்கப்படும் என்ற பயத்தில் இளைஞர் ஒருவர் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிச் செல்கிறார்.

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிக அளவில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.

மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம் கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது.

ஒடிசாவில் சத்தீஸ்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் ஓட்டுநரிடம் உரிமம் இல்லாதது உட்பட பல விதிமீறல்களுக்காக அவருக்கு ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டது.

டெல்லியின் ஷேக் சாராய் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் போதையில் இருந்ததாக போலீஸார் அவருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது இருசக்கர வாகனத்தைத் தீ வைத்து எரித்தார். இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் நாடு முழுவதும் வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வரிசையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி போலீஸார் ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது தவறாக நடந்துவிட்டது என்று போலீஸ் தரப்பில் விளக்கம் கூறப்பட்டிருந்தது.

தற்போது பியுஷ் வர்ஷ்னே என்ற அந்த இளைஞர் தினமும் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிக் கொண்டிருக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மறுபடியும் அபராதம் செலுத்த வேண்டி வருமோ என்ற பயத்தில் ஹெல்மெட் அணிந்து கார் ஓட்டிக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ''ஹெல்மெட் அணியாமல் கார் ஓட்டியதற்காக தன்னிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அந்த இளைஞரிடமிருந்து புகார் வந்துள்ளது. விசாரித்தபோது இது தவறாக நடந்துள்ளது தெரியவந்தது. இது கவனக்குறைவால் நடந்த ஒரு தவறாகும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x