Published : 10 Sep 2019 12:18 PM
Last Updated : 10 Sep 2019 12:18 PM

டெல்லி விமான நிலையத்தில் துன்புறுத்தப்பட்டேன்: மாற்றுத்திறனாளிகள் செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு

புதுடெல்லி,

மாற்றுத்திறனாளிகள் நல செயற்பாட்டாளர் ஒருவர் தன்னை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய சிஐஎஸ்எஃப் ஊழியர்கள் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கிறார் விராலி மோடி. மாற்றுத்திறனாளிகள் நல செயற்பாட்டாளரான இவர் அண்மையில் இந்தியா வந்தார்.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், சிஐஎஸ்எஃப் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில், "மும்பையிலிருந்து டெல்லி செல்ல திட்டம். இந்திராகாந்தி விமான நிலையத்தில் சோதனையின்போது சிஐஎஸ்எஃப் பெண் ஊழியர் ஒருவர் என்னை பரிசோதனை செய்ய வீல் சேரில் இருந்து எழுந்து நிற்கச் சொன்னார்.

நான் எனது நிலையை விளக்கினேன். 2006-ல் ஏற்பட்ட முதுகு தண்டுவட காயத்துக்குப் பின்னர் என்னால் நடக்க இயலாமல் போனது என்றேன். ஆனால் அவர் அதனைக் கேட்கவே இல்லை. தொடர்ந்து கூச்சலிட்டார். நான் நாடகமாடுவதாகக் கூறினார். சோதனைக்கு எழுந்து நிற்க வேண்டும் என வற்புறுத்தினார். என்னுடன் துணைக்கு வந்த பெண் ஒருவர் எல்லாவற்றையும் எடுத்துரைத்தார். அதற்குள் வேறு ஒரு நபர் வந்து என்னை அனுப்பிவைத்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

விராலி மோடி இது தொடர்பாக சிஐஎஸ்எஃப் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.

சிஐஎஸ்எஃப் விளக்கம்..

இந்த புகார் குறித்து சிஐஎஸ்எஃப் செய்தி தொடர்பாளர் அனில் பாண்டே கூறும்போது, "புகாரை பரிசீலித்து வருகிறோம். இந்திரா காந்தி விமான நிலையத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் ஊழியர் ஒருவர் புகார் கொடுத்த விராலியிடம் பேசியிருக்கிறார். முழு விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வோர் நாளும் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இங்கு வந்து செல்கின்றனர். அவர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப தேவையான உதவிகளை வழங்கி வருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x