

நொய்டா,
நொய்டாவில் வாகன சோதனையின்போது ஐடி இளைஞர் ஒருவர் மாரடைப்பில் பலியான சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி காசியாபாத் பகுதியில் கடந்த ஞாயிறு மாலை 6 மணியளவில் கார் ஒன்றை போக்குவரத்து காவலர் ஒருவர் வாகன சோதனைக்காக நிறுத்தியுள்ளார்.
அந்தக் காரில் 35 வயது இளைஞர் ஒருவர் இருந்துள்ளார். அவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். காரில் அவருடன் அவரது வயதான பெற்றோர்களும் இருந்துள்ளனர்.
வாகன சோதனையின்போது திடீரென அந்த இளைஞர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சரிந்திருக்கிறார். அவர் மாரடைப்பில் இறந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து அந்த இளைஞரின் பெற்றோர், "எல்லாவற்றிற்குமே ஒரு வரைமுறை இருக்கிறது. வாகன சோதனை என்றாலும்கூட அதை கனிவுடன் மேற்கொள்ளலாமே. இத்தனைக்கு என் மகன் ஒன்றும் காரை வேகமாக ஓட்டவில்லை. நானும், என் மனைவியும் உள்ளே இருந்தோம். ஆனால், காரை நிறுத்திய வேகத்தில் அந்த போலீஸ்காரர் எங்கள் காரை லத்தியால் ஓங்கி தட்டினார். திரும்பத்திரும்ப அவ்வாறு செய்தார். அவர் காட்டிய கடுமையாலேயே எனது மகனை நான் இன்று இழந்திருக்கிறேன். என் 5 வயது பேத்தி தனது தந்தையை இழந்து நிற்கிறாள். அவளை இனி யார் வளர்த்தெடுப்பார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் தலையிட்டு நீதியை நிலைநாட்டுவார்கள் என நம்புகிறேன்" என்றார்.
மறுக்கும் போலீஸ்..
ஆனால், இறந்துபோன இளைஞரின் குடும்பத்தார் முன்வைக்கும் குற்றச்சாட்டை போலீஸார் மறுக்கின்றனர். இது குறித்து கவுதம் புத் நகர் மூத்த காவல் அதிகாரி வைபவ் கிருஷ்ணா, "இந்த சர்ச்சையை நாங்கள் ஊடகங்கள் வாயிலாகவே தெரிந்து கொண்டோம். உடனே துறை ரீதியாக தீவிர விசாரணை நடத்தினோம். இறந்துபோன் இளைஞர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதனால் ஏற்பட்ட மாரடைப்பிலேயே அவர் பலியாகி இருக்கிறார். இதனை காசியாபாத் காவல்துறை தலைமைக்குத் தெரிவித்துவிட்டோம்" என்றார்.
புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் தலைநகர் டெல்லியில் அது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. ஏற்கெனவே இளைஞர் ஒருவருக்கு ரூ.23,000 அபராதம் விதிக்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது வாகன சோதனையின்போது இளைஞர் ஒருவர் மாரடைப்பால் இறந்திருக்கிறார்.
- ஏஎன்ஐ