Published : 10 Sep 2019 11:17 AM
Last Updated : 10 Sep 2019 11:17 AM

14 நாட்களுக்குள் தெலுங்கு கற்பேன்: ஆளுநர் தமிழிசை

ஹைதராபாத்

14 நாட்களுக்குள் தெலுங்கு கற்றுக்கொள்வேன் என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆளுநராகப் பதவியேற்றார். பதவியேற்பதற்கு முன்பாகவே ஆளுநர் பணி குறித்து விவரமாக அறிந்துகொண்டார். ஹைதராபாத் வருவதற்கு முன்பாகவே தெலங்கானாவின் சமூக - பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துப் படித்துத் தெரிந்துகொள்ளத் தொடங்கினார்.

தெலங்கானா மக்களுடன் சொந்த மொழியில்தான் பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் தமிழிசை, 14 நாட்களுக்குள் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே நேற்று (திங்கட்கிழமை) ஆளுநர் மாளிகையின் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டார். அங்குள்ள நூலகத்துக்கும் சென்றார். தன்னுடைய சொந்த நூலகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதாகவும் அவையனைத்தும் ஹைதராபாத்துக்கே கொண்டு வரப்படும் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

அங்குள்ள அதிகாரிகளுடனும் ஊழியர்களுடனும் உரையாடிய ஆளுநர் தமிழிசை, தினந்தோறும் தான் யோகா செய்வதாகத் தெரிவித்தார். நடைப்பயிற்சியையும் மேற்கொள்வதாகத் தெரிவித்த அவர், ஆளுநர் மாளிகை ஊழியர்களும் உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். அதன் மூலமே சிறந்த உடல் நலனைப் பெற முடியும் என்று அறிவுறுத்தினார்.

அதேபோல மாநிலத்தை தலைசிறந்த ஒன்றாக மாற்ற, அனைவரும் அரசியல், சமூக வித்தியாசங்களை விடுத்து ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்றும் ஆளுநர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x