Published : 10 Sep 2019 10:21 AM
Last Updated : 10 Sep 2019 10:21 AM

பாபர் மசூதி இடிப்பு வழக்கு; ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்த முடிவு: நீதிமன்றத்தை நாடிய சிபிஐ

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தான் முன்னாள் ஆளுநர் கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள சிபிஐ நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்தரப் பிரதேச மாநில முதல்வராக இருந்தவர் கல்யாண் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கைக் கையாண்டு வரும் சிபிஐ, பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரி, கல்யாண் சிங் ஆகியோர் மீது கிரிமினல் சதி குற்றம் சாட்டியது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 19-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக கல்யாண் 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இதனால் ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்த முடியவில்லை. ஆனால், கல்யாண் சிங்கின் பதவிக்காலம் முடிந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தற்போது பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இதுநாள் வரை ஆளுநர் என்ற பதவியில் இருந்ததால், அரசியல் சாசனப்படி பாதுகாப்பு பெற்று, சிபிஐ அமைப்பால் விசாரணைக்கு ஆளாகாமல் கல்யாண் சிங் தவிர்த்து வந்தார்.

உச்ச நீதிமன்றமும் சிபிஐ அமைப்பிடம் முன்பு தெரிவிக்கையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் கல்யாண் சிங் பதவி முடிந்ததும், அவரை விசாரணைக்கு அழைக்கலாம் என்று தெரிவித்திருந்தது. ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வந்த கல்யாண் சிங் 5 ஆண்டுகள் காலம் முடிந்து, அங்கு ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பதவி ஏற்றுள்ளார். இதனால் கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்துவதற்கு இதுவரை இருந்துவந்த அரசியல் சாசனப் பாதுகாப்பு முடிந்துவிட்டதால் இனிமேல் அவரிடம் சிபிஐ விசாரணை நடத்தத் தடையில்லை. அதுமட்டுமல்லாமல் ஆளுநர் பதவி முடிந்த நிலையில் மீண்டும், தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டு, தீவிர அரசியலில் கல்யாண் சிங் ஈடுபடத் தொடங்கியுள்ளார்.

ஆனால், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ, கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. சிபிஐ தாக்கல் செய்த மனு இன்று சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

ஜெய்ப்பூரில் நேற்று கல்யாண் சிங் முறைப்படி பாஜகவில் சேர்ந்தார். உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் முன்னிலையில் கல்யாண் சிங் பாஜகவில் இணைந்தார். அப்போது கல்யாண் சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "அயோத்தி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தங்களின் நிலைப்பாடு என்னவென்று தெளிவாகக் கூற வேண்டும். ராமர் கோயில் கட்டுவது என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பம். கடவுள் ராமர் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையின் உருவகம். இந்த விஷயத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால், அனைத்துக் கட்சிகளும் இந்த விஷயத்தில் தங்களின் நிலையை தெளிவுபடுத்த வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவு அளிக்கிறார்களா இல்லையா என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

கல்யாண் சிங்கிற்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில், " உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக கல்யாண் சிங் இருந்தபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முன் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் ஆஜராகி சர்ச்சைக்குரிய கட்டிடத்தை இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.

ஆனால், பாபர் மசூதி இடிக்கும் சூழல் நிலவுகிறது என்று அறிந்தபின்பும் கூட முதல்வராக இருந்த கல்யாண் சிங் மத்தியப் பாதுகாப்புப் படையைக் கோரவில்லை. இதன் மூலம் பாபர் மசூதி இடிப்பு சதியில் கல்யாண் சிங்கிற்கும் தொடர்பு இருக்கிறது. அதற்கான முகாந்திரங்கள் அதிகமான இருக்கின்றன" எனத் தெரிவித்துள்ளது.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின், கல்யாண் சிங் முதல்வர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x