

மும்பை,
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறியவரும், தனது மகளைக் கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கடந்த மாதம் 21-ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில், தற்போது திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநராக இருந்த இந்திராணி முகர்ஜி அவரின் கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சிதம்பரத்தைச் சந்தித்து வெளிநாட்டில் இருந்து முதலீடு வருவதற்கு உதவி கோரியதாக சிபிஐ கூறுகிறது.
ப.சிதம்பரம் செய்த உதவிக்கு பிரதிபலனாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் இந்திராணி முகர்ஜி முதலீடு செய்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், தனது வாக்குமூலத்தை ஏற்கெனவே சிபிஐயிடம் வழங்கியுள்ளார். அதில் ப.சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து தங்களுக்கு முதலீடு வருவதற்கு உதவி செய்தார். அதற்கு பிரதிபலனாக, கார்த்தி சிதிம்பரம் நடத்தும் நிறுவனத்தில் முதலீடு செய்தோம் என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திராணி முகர்ஜி தனது மகள் ஷீனா போராவைக் கொலை செய்த வழக்கில் பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய அவரின் கணவர் பீட்டர் முகர்ஜியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை விசாரித்து வரும் சிபிஐ , அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மனுத்தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி ஜே.சி. ஜெகதலே, பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு அனுமதி வழங்கினார். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை இந்திராணி முகர்ஜியிடம் சிபிஐ விசாரணை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிடிஐ